Skip to main content

பின்நவீனத்துவ மெய்யியல் சில முரண்பாடுகள்

பின்நவீனத்துவ மெய்யியல் சில முரண்பாடுகள்

பின்நவீனத்துவம் குறித்த பலதரப்பட்ட கதையாடல்கள் மற்றும் புதுமையான சிந்தனைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புகள் ஒரு தரப்பில் இருந்து எழுவதாக தெரியவில்லை. ஏனெனில் இது ஒருசாராரின் கட்டமைப்பையோ அல்லது மெய்யியலையோ எதிர்க்கவில்லை, மாறாக பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ள கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள், பழமைவாதம், சீரான சிந்தனைவரைமுறை ஆகிய பலதையும் எதிர்க்கிறது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் அதை விலக்குகிறது. இதன் பொருள் பின்நவீனத்துவம் பொதுவாக பல எதிர்வாதங்களை ஏற்றுக்கொண்டது என்றே கூறவேண்டும். ஒரு தனித்துவமான பெயரை கொள்ளாத இந்த மெய்யியல், நவீனத்துவத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டதால் இப்பெயர் கொண்டதா? அல்லது நவீனத்துவத்தை பின்னுக்கு தள்ளுவதே முக்கிய நோக்கமாகக்கொண்டதால் இப்பெயர் வந்ததா? என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. நான் எதிர்வாதம் என்ற வார்த்தையை உபயோகித்ததன் காரணம் பல மெய்யியலறிஞர்கள் பதற்றத்தை நம்மால் உணர முடிகிறது. முதலாளித்துவத்தின் பதற்றமோ, எதிர்ப்போ, கண்கூடாக நாம் என்றுமே காணமுடியாத சூழலுள்ளது. ஏனெனில், முதலாளித்துவக் கட்டமைப்பு கடந்த 200 ஆண்டுகளில் கண்ட, படிநிலைமாற்றம் பலவிதமான மாயநிலைகளை தோற்றுவித்தது. இன்று ஒரு தனிநபரை முதலாளி என்று கூறுமளவிற்கு இருப்பதில்லை. அது ஒரு மறைபொருளின் அர்த்தம் போலவே உள்ளது.

ஆனால் பின்னவீனத்துவத்தின் முக்கியமான எதிர்ப்பு மையஅதிகாரம் என்பதுதான். இது அதிகாரவர்க்கம் மற்றும் தொழில்துறை போன்றவற்றில் சிந்தனைத்தாக்கம் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் மேலும் வலுவாகலாம்.இன்றைய நிலையில் அது சீர்திருத்தம் என்ற போர்வையில் வேறு பலதுறைகளை தேர்ந்தெடுத்து தன் எதிர்ப்பை வெளிக்காட்டுகிறது கலை, ஓவியம், கட்டிடத்துறை, இசை, நடனம், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் நம்மால் இதன் தாக்கத்தை காண முடிகிறது. எந்த எதிர்ப்பையும் ஆதாயமாக மாற்றும் தன்மைகொண்ட இன்றைய முதலாளித்துவமே மேல் சொன்ன சீர்திருத்தத்தை நன்றாக அறுவடை செய்கிறது. எனினும் இதனால் மக்களின் மனதில் ஏற்படும் பின்நவீனத்துவ அதிர்வலைகள் மிகச் சிறியவையே.

பின் நவீனத்துவத்தின் மெய்யியல் பரப்பு

நம்மால் இதற்கு முன்னாலுள்ள மெய்யியல் சிந்தனைகளின் காலஅட்டவணையை உணர முடிந்தால்,அதன் வேர் எவ்வளவு பின் சென்றது என்றும்,அதன் விளைவு எவ்வளவு முன் சென்றது என்றும் கணக்கிட முடிந்தால் ஒரு மெய்யியலின் முழுமையான பல பரிமாண தோற்றத்தையும் முழுஉருவையும் கண்டுகொள்ள முடியும்.மேலும்  இக்காலநிலை என்பது பின்நவீனத்துவத்தின் ஆரம்ப நிலையே ஆகும். அது சந்திக்க வேண்டிய நிதர்சனமான சவால்கள் பல உள்ளன. இந்தக்கரு ஒரு செல் உயிரினமாக உள்ளது. இது அடைய வேண்டிய வளர்ச்சி, சமுதாய சூழ்நிலையில் அமையும். பொருள்முதல்வாதகோட்பாடு இன்றைய நேற்றைய சிந்தனை அல்லவே! அது அயோனிக் தத்துவ பள்ளியில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. ஏன்! அதற்கும் முன்னால் விவாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் கால அளவை நாம் மலைப்புடன் காண்கிறோம். ஆனால் இக்கோட்பாடு அனாயாசமாக மதத்தினாலும் ஆட்சியாளர்களாலும் முதலாளிகளாலும் புறந்தள்ளப்படுகிறது. என்றாலும் இதை தோல்வி என்று கொள்ள முடியாது. அது இன்றைய மக்களின் உயிரோட்டமான சிந்தனையாக இல்லாததே காரணம். இந்த தேக்கநிலை தற்காலிகமானதே.

அதேபோல் பின் நவீனத்துவம் காண வேண்டிய படிநிலை இன்னும் நிறைய உள்ளது அது சந்திக்க வேண்டிய முரண்கள் இன்னும் உள்ளன. தன்னை  உறைகல்லில் பரிசோதிக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து நாடுகளுக்குமான நிதர்சனத்தை தன் மெய்யியலில் அது உள்ளடக்க வேண்டும்.வர்க்கத்திற்கு மாற்றாக அது சொல்லும் மையம் மற்றும் விளிம்பு என்ற கருத்தில் உள்ள நிறை குறைகளை சுய பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அது தன்னை சமூகஉற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகிய அடிப்படை கூறுகளில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக இன்னும் முதலாளித்துவத்தின் கண் இந்த மெய்யின் மீது முழுமையாக படரவில்லை. இந்த முன்னேற்றங்கள் இன்னும் வருங்காலங்களில் நடக்க வேண்டி உள்ளது. மேலும் இன்றைய நிலையில் உற்பத்தியைத்தாண்டி, பொருள் மீது ஆதிக்கம் கொண்டது பொருள்வினியோகமேயாகும். இந்தப் பகுதிக்குள் பின்நவீனத்துவம் நுழையவில்லை. பொருளாதார கட்டமைப்பை சாராத ஒரு மெய்யியல்தளம், அரசு அமைக்கவோ சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவோ, தன் கையில் வைத்திருக்கும் மாபெரும் சக்தி என்னவென்று தெரியாதவாறு கையை மூடி வைத்துள்ளது.

சுழலில் மாட்டிய சிந்தனை

கட்டுடைத்தலின் உண்மையான விளக்கம் அதை முந்தைய வரலாற்றில் பொருத்திப்பார்த்து, புது வரைமுறையை செய்ய முடியாதபடி தன் சுழலில் தானே மாட்டிக்கொண்டது. கட்டுடைத்தல் ஒரு வரையறையோ அல்லது விதிகளின் கீழே கொண்டுவரப்பட வேண்டும்.ஒரு விளிம்பு நிலை மனிதனுக்கு இந்த மெய்யியல் எந்த அளவுக்கு தெளிவை கொடுக்கும்? இவை விதிகளாகவோ கோட்பாடுகளாகவோ இல்லாமல் குறுந்ததையாடல்களாக இருத்தல் என்ன மாற்றத்தை கொடுக்கும் என்பது ஒரு மாபெரும் கேள்வி. ஒரு மனிதனின் உணர்வு சார்ந்த கருத்தாக ஒரு மெய்யியல் அமையுமானால், அது தரும் விளைவு என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக அமையும். இதுவரை வெகுஜனவியம் ஒரு மெய்யியல் தளத்திலோ அல்லது ஒரு வரையறைக்குள்ளோ கொண்டுவர முடியாத காரணத்தினால் அதன் விளைவுகளை நம்மால் கணிக்கவும் முடியவில்லை  அறுதியிட்டு கூறவும் முடியவில்லை.

தனி சொத்துரிமையின் மாபெரும் சக்தியை இந்த மெய்யியல் அறிய வேண்டும். அது எவ்வாறு சமுதாய உணர்வை தாண்டிய குடும்ப உறவைப் பேணியது என்ற புரிதல் வேண்டும். இதையெல்லாம் தாண்டி திருமண உறவில் உள்ள அனைத்து முரண்களையும், அதனுடன் உள்ள சொத்துரிமைகளையும், அரசின் சட்ட திட்டங்களையும் கொண்ட பொதுவான பார்வை வேண்டும். இன்று பின்நவீனத்துவம் ஆதரிக்கும் ஓரினச்சேர்க்கை திருமணங்களின் நிதர்சன விளைவு சமுதாயத்தில் சொத்துரிமையுடனான முரண் ஆகியவற்றை குறுங்கதையாடல்கள் மூலமாக அது தீர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை ஒன்றே போதுமானதா?

இயக்கவியலாளர்களின் பங்கு

இயக்கவியலின் மூன்று விதிகள் வரலாற்றின் ஆரம்பம்முதல் ஆராயப்பட்டு ஒவ்வொரு மயில்கல்லும் உறுதி செய்யப்பட்டவை. ஆதலால் இயக்கவியலின் முழுமையான தெளிவை பெற்றயாரும் பின்நவீனத்துவத்தின் முழுமையான உருவை பெறுவதற்கு முயல்வார்கள். நவீனத்துவத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதம், இயக்கவியலின் விதிகளின்படி எதிர்வாதம் வைக்கப்படும். அதன் பின் பேச்சுவார்த்தை (synthesis) ஏற்பட குறுங்கதையாடல் போதுமா? என்ற கேள்வி எழுகிறது.மாற்றமும் வளர்ச்சியும் இயக்கவியலின் அடிப்படை, சரியான கதையாடல் இந்த மெய்யியலை முன்கொண்டு போகும். முற்போக்கு சிந்தனையாளர்களை, பிற்போக்குவாதிகளாக மாற்றும் தோற்றப்பிழையை நாம் இங்கு காண்கிறோம். நவீனசிந்தனையில் முற்போக்குவாதிகளாக இருந்தவர்களை, பின்நவீனத்துவம் பிற்போக்குவாதிகளாக ஆக்கியது. இந்த மாற்றமும் ஏற்கப்பட வேண்டியதுதான். இவை அனைத்தும் இயக்கவியலின் விதிகளின்படியே நடக்கிறது என்பதுதான் நிதர்சனம்.ஆரம்பநிலையிலான பின்நவீனத்துவம் கற்பனாவாதமாக மாறாமல் அதன் வழிப்போக்கை நிறுவ வேண்டிய கடமை அனைவருக்குமானது, அதில் இயக்கவியலுக்கு முதலிடம் உள்ளது.

கம்யூனிசத்தின் பங்கு

முரண்கொண்ட முதலாளி மற்றும் தொழிலாளி வர்க்கம் ஒரு அணியில் இருந்து மூன்றாவது அணியை எதிர்க்கும் நிலை வருமோ என்ற பதட்டமா? என தெரியவில்லை. இன்றைய அனைத்து மெய்யியல் பரப்பில் மிகவும் பரிசோதிக்கப்பட்ட அடிப்படையான மெய்யியல் சிந்தனை கொண்ட கம்யூனிஸ்டுகள் சிறிது தடுமாறிய இடம் இந்த இந்தியதேசம்தான். சமுதாய உறவுகளை தன் மரபாலும், பழமையினாலும், மூடநம்பிக்கையினாலும், பெரும் கதையாடல்களினாலும் அது போர்த்தியிருந்தது. மதம், மரபு, பழமை நம்பிக்கை, இவைகளை பிரித்தெறிய முடியாவண்ணம் பின்னிப்பிணைந்து தன்னகத்தே கொண்டுள்ளது. விஞ்ஞானரீதியான இந்த பெரும் சதியை உணரவோ எதிர்க்கவோ கம்யூனிஸ்ட்கள் காலம் தாழ்த்தியதே இந்த தேசத்தின் தனித்தன்மை. இந்தியாவில் ஒரு மனிதன் மதம், சமயம், மரபு, சடங்கு, சாதி, குலம், வகை, தொழில், இடம், இனம், மொழி இன்னும் ஆயிரம் அலகுகளினால் வேறுபட்டுள்ளான். இவை அனைத்தும் தனித்தனியாக சமுதாயம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆனால் சமுதாயம் என்பது என்றும் பொருளாதாரம் சார்ந்த உற்பத்தி உறவுகளைக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவை இன்று நம் கண்ணில் நிதர்சனமாக தென்படுவதில்லை. ஆனால்  சமுதாயம் குடும்பவளர்ச்சியில் மற்றும் தனி மனிதஉணர்வின் காரணமாக சிதறுண்டது. சமுதாயத்திற்கு மாற்றாக குடும்பம் அதன்பின் குடும்பதிற்கு மாற்றாக தனிமனிதன் என்று தத்துவங்கள் சமுதாயஉணர்வின் முக்கியத்துவத்தை மாற்றி, இன்று அது தனிமனிதனை அடைகிறது. பின்நவீனத்துவம் இதை சுதந்திரம் என்று அழைக்குமாயின், அதை உறுதிப்படுத்த கம்யூனிசத்தின் யதேச்சதிகாரம் தனிமனித சுதந்திரம் இல்லை என்ற வாதத்தை வைக்கிறது.

தனிமனிதசுதந்திரம் (personal liberty) இந்தச் சொல்லாடல் பிரெஞ்சு புரட்சியில் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டது. பிரபுத்துவகாலத்தின் முடிவில் முதலாளித்துவகாலத்தின் ஆரம்ப நிலையில் அடிமைநிலையில் உள்ள மனிதன் தன் மனதை தனக்குச் சொந்தமாக கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாடல் இது. பிரபுத்துவ-அரசாட்சியின் காலங்களில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை தனி மனித சுதந்திரமாக கருதப்பட்டது. இந்தச் சொல்லாடல் காலத்திற்கு காலம் மாறுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பகால குரங்கு மனிதனின் நிலையில் கூட தனிமனித சுதந்திரம் என்பது, தான் நினைத்ததை செய்யும் நிலையாக இருக்கவில்லை, இயற்கை அதற்கு சரியான சவாலாகவே இருந்தது. இன்றைய ஏனைய மெய்யியல்கள் (individualistic philosophy) தன் பெரும்பான்மையான இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அது பெரும்பாலும் சுயசுதந்திரம், பிறப்பின் பலனே சுதந்திரம், சுதந்திரமாக இருக்க விதிக்கப்பட்டவர்கள் என்ற தனிமனிதன் சார்ந்த மெய்யலை தருகிறது. அது தன் கடைசி பங்காக அறம் மற்றும் சமுதாயநலனை பேருக்கு சேர்த்துக் கொள்கிறது. தனிமனித சுதந்திரம் தனியுணர்வு போன்றவை மேம்படும்போது சமுதாயத்தின் உணர்வுகள் தன் வல்லமையை இழக்கின்றன என்ற உண்மையை நாம் இன்றளவும் கண்கூடாக பார்க்கிறோம். தனிமனித உணர்வு குடும்பத்தை தகர்ப்பது போலவே, குடும்ப உணர்வு சமுதாயத்தை தகர்க்கிறது. இந்த முரண் பின்நவீனத்துவவாதிகளின் செவியில் எட்டும்வரை கம்யூனிஸ்டுகளின் கடமை ஓய்வதில்லை.இதே போலவே தனியுடைமை, அதைக் காக்கும் அரசு, அதற்கு உதவும் சட்டங்கள், இவைகளின் ஆணிவேரான சொத்துடைமை என்று உரக்கச் சொல்வதும் கம்யூனிஸ்ட்களின் கடமையே.

பின்நவீனத்துவவாதிகளின் பங்கு

பின்நவீனத்துவத்தின் தாக்கம் என்பது தொடங்க நிலையில் உள்ளது இது ஒரு மாபெரும் வாய்ப்பு. கற்பனாவாத சோசியலிஸ்ட்களின் தோல்வியடைந்த சோகமான வாழ்க்கை முடிவுகளை நீங்கள் படிக்க தவறாதீர்கள். அவர்கள் அனைவருமே உன்னதமான மனிதர்கள். தொழிலாளியின் நலன் கருதியவர்கள், ஆனால் அவர்களிடம் விஞ்ஞானபூர்வமான மெய்யியல் இல்லை. தன்னால் முடிந்தவரை தன் சொத்துக்களை கொண்டு ஒரு பொதுவுடமை உற்பத்தி முறையை உருவாக்கினார்கள். அதன் முடிவு மிகவும் சோகமானது. பின் சார்டிஸ்ட்  இயக்கம் தன்னால் முடிந்த அனைத்து விதமான முயற்சிகளையும் இடைவிடாது பல எதிர்ப்புகளை தாண்டி தோல்விகளையும் துரோகங்களையும் சுமந்து தன் முயற்சியை செய்தது. அரசு மற்றும் முதலாளிகளின் சக்தி சார்டிஸ்ட் இயக்கத்தை பெரிதும் எதிர்த்தது.

·          செயின்ட் சைமன் (1760 – 1825) அவரின் செயல்பாடுகள் 1803 தொடங்கின.

·          ராபர்ட் ஓவன் (1771-1858) அவரின் செயல்பாடுகள் 1800 தொடங்கின.

·          சார்ட் ஸ்ரீ இயக்கம் (1838-1857) இதன் அதிக பங்களிப்பு 1838 முதல் 1848 வரை

·          பிரெஞ்சு 1848 பிப்ரவரி புரட்சி

·          தாஸ் கேப்பிட்டல் இன் தோற்றம் 1867 முதல் 1894

·          ரஷ்ய புரட்சி 1917 முதல் 1923

இந்தக்கால அட்டவணையை வைத்து ரஷ்யபுரட்சி என்பது 120 வருடமாக சிந்தித்து போராடி பின் தத்துவவரையறைக்கு உட்பட்டு ஒரு மெய்யியல் தளத்தில் முதலாளித்துவத்தை எதிர்த்த வரலாறு உள்ளது. இப்படி ஒரு எண்ணம் பின்நவீனத்துவவாதிகளுக்கு இருக்குமாயின் அவர்கள் ஒரு தனிமனிதனின் படைப்பாகவோ, சிந்தனையாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ இருந்தால் அதை நாம் கற்பனை நிலையான தத்துவம் என்றே கொள்ளல் வேண்டும். பின்நவீனத்துவவாதிகளின் பொறுப்புகள் இமாலய அளவை ஒத்திருக்கிறது. எளிமையான வரையறுக்கப்பட்ட சுருக்கமாக விளக்கக்கூடிய விதிகளை கொண்ட ஒரு குறுங்கதையாடல் முறையை தோற்றுவித்தல் வேண்டும். இந்த முறை எந்தத்துறையையும் அலசி ஆராய்ந்து பார்க்க உதவிகரமானதாக இருக்கும்.

ஜென் தியானம் பழமைவாத தியானமுறைகளை எதிர்த்து. எந்த ஒரு அணுகு முறையையும் நூலையும் தத்துவத்தையும் கூறவில்லை. இதைத் தவிர அது பெரும்பாலும் பழமைவாததியான முறையில் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பெரும் குழப்பமாய் நம் முன்னே இருக்கிறது. தியானத்தின் பின்நவீனத்துவமாக ஜென்முறையை கொண்டால், அது எந்தவித மாபெரும் தாக்கத்தையும் கொடுக்கவில்லை, எளிதில் விளக்கமுடியாததாக, விளங்கக்கூடியதாகவும் இல்லை. விளங்கிய சிலரோ அதை விளக்க முற்படுவதில்லை. இந்த சிலர் ஜென் இல்லாமலும் அதில் வெற்றி கொள்பவர்களாக இருக்கலாம் அது தனிமனித திறமை. ஜென்முறையால் அல்ல. இதைப் போல குழப்பமான யுக்தியை பின்நவீனத்துவம் கைக்கொள்ளாமல் உற்பத்தி மற்றும் விநியோகம் அடிப்படையில், அறம் மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தின் குரலாய் அது ஒலிக்க வேண்டும். நாடு மற்றும் காலத்திற்கு ஏற்ப அது மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றில் ,உலகசமுதாயம் சிந்தனையி தன் தாக்கத்தை பதிக்க வேண்டும். முரண் கொண்ட உலகில் அவற்றை ஆராய்ந்து அவற்றின் மூலம் தன் மாற்றுக்கூறுகளை முன் வைத்தல் வேண்டும். இறுதியாக கட்டுடைத்தலினால் வரும் பின்விளைவுகளைப் பற்றி ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. கணினி உதவியோடு உள்ள பகுப்பாய்வில் (Computer Aided Analysis), ஒரு பொருளை சிற்சிறு கண்ணிகளாக வகையீடு செய்து (Differentiation), அதன் மாதிரி நடைமுறை விஷயங்களை குறித்து செய்யும் பகுப்பாய்வில், ஆய்வின்பின் ஒருங்கிணைத்த ஒன்றாகத்தொகையீடு செய்தல் (Intergration) என்பது மிக முக்கிய பணியாகும். சிதறி போன முத்துக்கள் பின்நவீனத்துவவாதிகளின் ரசனைக்குரிய ஒன்றாக இருக்கலாம். அது இயற்கையின் தேர்வாக அமையாமலும் போகலாம். முத்துக்களை எடுப்பதோ, கோர்ப்பதோ அல்லது சிதறிய முத்துக்களை காலமெல்லாம் ரசிப்பதும் பின்நவீனத்துவவாதிகளின் தேர்வு.முத்துக்களாக உள்ள குறுங்கதையாடல்கள் வரவேற்கப்படலாம், அதுசிதறி அழகான ஒரு நிலையையும் தரலாம், ஆனால் முத்துக்களுக்கு பதிலாக பாதரசத்தை சிதறவிட்டு அழகு பார்க்காதீர்கள்.


Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2  மனித மனம் எப்படிப்பட்டது ?   இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது . அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது) . இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது. இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும்...