மொழியில் இயங்கியல்
ஆரம்ப காலங்களில் செயலின் கட்டளைகளாக அல்லது வினைச்சொல்லாக
மட்டுமே மொழி இருந்தது. பின்னர் அது இடம் விட்டு இடம் செல்லும் பொழுது, பிராந்திய நிலை
நிலவியல் மற்றும் தட்பவெட்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் சிற்சில ஒலி மாற்றங்களைக்கொண்டது.
இந்த மாற்றங்கள் அனைத்துமே மொழியின் படிநிலை வளர்ச்சி என்று கொண்டால், அது இயக்கவியலின்
விதிகளின்படியே செயல்படுகிறது. நாம் இன்றளவும் பலமொழி குடும்பங்களின் ஒப்பீடுகளையும்
அதன் ஆராய்ச்சிகளையும் கண்டு வருகிறோம். அதன் உச்சரிப்பு மற்றும் அதன் பொருள் ஆகியவற்றை
கொண்டு கூடியவரை ஒத்தவைகளை வைத்து மொழிக்குடும்பங்களாக பிரிக்கிறோம். மொழிகளின் ஆராய்ச்சியில்
ஒரு உன்னத கண்டுபிடிப்பு என்பது மொழிகளின் ஒருமைப்பண்பை கொண்டு அதனை குடும்பமாக பிரிப்பது.
மொழி என்பது அரசியல் பின்புலத்தில் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நாம் நன்றாக அறிவோம்.
ஆங்கிலேயர் வருகையும், அதற்கு முன்னரே போர்ச்சுகீசிய
வருகையில் இந்திய மொழிகளில் மேல் ஈர்ப்பு கொண்டு, அதனை கற்றுக்கொண்டு ஆராயும் விருப்பமுள்ள
பல சமய பாதிரியார்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் விருப்பம் சமஸ்கிருதமாக இருந்தது.
மதத்தைக்கடந்த மொழி ஆர்வமாக அது இருந்தது என்றாலும் இந்திய இனத்தை அவர்கள் பைபிளில்
புராணவம்சத்தோடு இணைக்க முயற்சிகள் நடந்தனவே.சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தை ஃபாதர்
ஹாங்க்ஸ்லீடன் தொகுத்தார்.அதேபோல் ஃபாதர் கோயர்டோக்ஸ் சமஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய
மொழிகளின் இடையே உள்ள ஒப்பீட்டை வைத்து இந்த மொழியின் நெருங்கிய உறவை முதலில் உணர்ந்தார்.
ஆனால் இதுவரையிலும் அவர்கள் யாருக்கும் தெரியாத ஒரு மாபெரும் பனிப்பாறையின் உச்சிநுனி
மட்டுமே இந்தியா. இந்தியா என்ற ஒரு தேசம் விந்தையிலும் விந்தையானது. இந்த உலகில் இல்லாத
அனைத்து வேற்றுமைகளையும் கொண்டது. மொழி இனம் தட்பவெட்பம் உணவு உடை பண்பாடு தெய்வங்கள்
மற்றும் சடங்குகள் அனைத்து கூறுகளும்
இயங்கிக்கொண்டே இருப்பவை மேலும் மேலும்
மாறுபாடுகளை கொண்டதாக இருக்கிறது. இவை அனைத்திலும் நாம் ஒருமை தன்மையை கண்டறிய நினைத்தால்
அது, தேசம் மதம் பண்பாடு ஆகியவற்றைக் கடந்த ஒரு சாரம்சமாக இருக்கும் அல்லது அப்படி
ஒன்று இல்லாமல் கூட போகலாம். எது எப்படியோ நாம் இங்கு மொழியின் வரலாற்றை, ஒரு சிறிய
பெட்டிக்குள் வைத்து பார்க்க முயற்சி செய்வோம்.
நம்மால் உலகில் உள்ள மொழிகளையோ மொழிக்குடும்பங்களையோ
ஆராய்ந்து அதில் எந்த விடயமும் விரைவாக காண இயலாது. ஆனால் நாம் பிறந்த மண்ணில் உள்ள
தனித்தன்மையான தமிழ்மொழியும் மற்ற மொழியான ஆங்கிலேயர்களை அதிகம் கவர்ந்த மொழியான சமஸ்கிருதத்தையும்
பற்றியும் வரலாற்று ஆய்வை மேற்கொள்ளலாம். ஒரு மொழியின் குறியீடுகள் என்பது வேறொரு (இணை)
மொழியின் அடிப்படையை கொண்டு ஆராயப்படலாம். ஆனால் பல மொழிகள் மொழி குடும்பங்களில் வழங்கொழிந்து
போனது அதன் உச்சரிப்புகள் சரியாக வகைப்படுத்தப்படாமல் போனதால்தான். நாம் இன்னும் கடந்து
போவதற்கு முன் என்னுடைய ஒரு கருத்தை தெளிவாக்குகிறேன். எந்த ஒரு மொழியும் மாறாத்தன்மையும்,
மாற்றத்தை ஏற்காத்தன்மையும் கொண்டிருக்கிறது என்றால், அது அழியாத்தன்மையை இழக்கும்.
மாற்றம் ஒன்றுதான் அழிவிலிருந்து மீட்கும் சக்தி கொண்டது. இது மொழி மதம் தேசம் இனம்
என்ற எல்லாவற்றிலும் பொதுவான விதியாகும். நாம் இவ்உண்மையை உணரும்போதுதான், பல நிதர்சனங்கள்
நம் கண்முன்னே தெளிவாகத்தெரியும். இன்றும் பலர் மொழிகளை தங்கள் இரு கண்கள் என புலமை
மனப்பாங்கொடு சொல்வதைக்கேட்கிறோம்.
ஒரு மொழியின் அடிப்படை ஆதாரம் என்பது என்ன? ஒரு
மொழி அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகள் நம் முன்னே உள்ளது.
இதை நன்கறிய நாம் வரலாற்றை சற்று பின்னோக்கிப்பார்த்தாலே போதுமானது. அதில் இக்கேள்விக்கான
பதிலை நாம் அடையலாம். ஒரு மொழியை காக்க பல இலக்கியங்கள் உருவாக்கினால் அதன் அழிவிலிருந்து
காக்கலாம் அல்லவா! ஒரு மொழியில் பலஅறிஞர் பெருமக்கள் தங்கள் ஆழ்ந்தகன்ற கருத்துக்களாலும்,
தத்துவங்களாலும், தோற்றுவிக்கும் கோட்பாடுகள் இலக்கியங்கள் அந்த மொழிக்கு வலுசேர்க்காமலா
போகும். இது மிகச்சரியானதாகவே நமக்கு தோன்றுகிறது. கிரேக்க காவியங்கள், கிரேக்க நாடகங்கள்
நமக்கு சொல்லாத விஷயங்களே இல்லை அல்லவா! சமஸ்கிருதத்தில் உள்ள புராணங்களும் அதன் கருத்துக்களும்
எண்ணற்றவை, அவற்றை விரல்கொண்டு எண்ண முடியா!. எகிப்திய நாகரீகம் மிகப் பழமையானது இருந்தாலும்
அதன் மொழிகள் வழங்கொழிந்தன என்றே நாம் பார்க்கிறோம். இயேசு காலத்தில் பேசப்பட்ட அரமைக்
மொழி கூட பெரும்பாலும் வழங்கொழிந்து போனது. அவை இன்று அசிரியன்அரமைக் மற்றும் ஹீப்ரு
மொழிகளில் காணலாம். ஏன் எதனால் இலக்கியம் அந்த மொழியை காக்க தவறியது? மீண்டும் நாம்
அடிப்படை புரிதலுக்கு வருவோம். ஒரு கூறு அதன் அழியாநிலையை அடைய அது மாற்றம் என்ற ஒன்றை
ஏற்க வேண்டும். மாற்றத்தை ஏற்க, உற்பத்தி உறவில் ஈடுபட வேண்டும். சமுதாய உற்பத்தியில்
அல்லது உற்பத்தி உறவுகளில் தொடர்பில்லாத எதுவும் மாற்றத்திற்கு உட்படாது. அதனால் அது
அழிந்து போவது தான் இயற்கையின் தேர்வு. நாம் காணும் அத்தனை மொழிகளும் வணிகத்தில் சம்பந்தப்பட்டதா?
சாதாரண கடைக்கோடி மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதா? என்ற கூறுகளே மொழியின்
அழியாத தன்மையை முடிவெடுக்கும். ஒரு மொழி மனிதர்களால் பேசப்படவில்லை எனில் அதன் இருப்பு
என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இடம் தொழில் காலம் ஆகியவற்றில் வரும் மாற்றத்தை
மொழி ஏற்றாக வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும். நாம் ஓரளவுக்கு இயக்கவியல் சார்ந்த விதிகளை
மொழியில் ஊடே செலுத்தி அதை காண விழைகிறோம். ஓரளவு வெற்றியும் பெற்றோம் என்று நினைக்கிறேன்.
ஒரு மொழியை மக்கள் கற்று பயன்பெற அதன் உற்பத்தி
மற்றும் பொருளாதார நோக்கமே ஆதாரமாக உள்ளது. அமெரிக்காவின் ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலத்தின்
வரலாறு தனித்தன்மையானது. அமெரிக்கா அதன் ஆட்சி மொழி வாக்கெடுப்பில் ஜெர்மன் மொழி தோற்றது.
ரஷ்யாவின் மன்னர் ஆட்சியில் ஐரோப்பிய மொழிகள் அதிக பெருமையும் சிறப்பும் பெற்றிருந்தன.
என்றாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் உபயோகம் எதுவோ அதுவே நிதர்சனமான தேசத்தின்
மொழியாகும். மொழிகளால் தேசங்கள் துண்டாடப்படுகின்றன, மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன,
மனிதர்கள் இடங்கள் இனங்கள் இவை அனைத்தையும் பிரிக்கும் கருவியாக மட்டுமே மொழிகள் இருப்பதில்லை.
மொழிகளின் செயல்முரண் இதுவே பிரிப்பதே சேர்க்கும், இதையும் நாம் இயக்கவியலிலேயே காண
முடிகிறது.
மொழி மற்றும் பண்பாடுகள் தன் இடநிலையை பரவச் செய்ய
வணிகத்தையே நம்பி இருக்கின்றன. ஆங்கிலமொழி கூட இந்தியாவிற்கு வணிகத்திற்காகவே வந்தது.
தமிழ் மொழியின் பரவல் கிழக்கு ஆசியாவில் வணிகர்கள் மூலமாகவே நடந்தது. மொழி மதம் மற்றும்
பண்பாடுகளை பல நாடுகள் அறிவதற்கு வணிகமே மிகச் சிறந்த கருவியாகும். வரலாற்று ஆசிரியரின்
பிரயாண கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் காலத்தையும் மட்டுமே தெரிவிக்கிறது.
ஆனால் இவர்களின் எல்லா அனுபவங்களும் தன்தேசத்தின் கடைநிலை மனிதன்வரை சென்று சேருமா
என்பது ஐயமே. ஆனால் ஊர்ஊராக சென்று உப்பு விற்கும் உமணன் மூலம், அயல் பிரதேசத்தின்
நிகழ்வுகளை நன்றாக பரவச் செய்யமுடியும். பௌத்தமதம் தன் நிலவியல் பரப்பை அதிகப்படுத்த
வணிகத்தினரே பெரும்பங்கு ஆற்றினர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்மன்னர்கள் பற்றி
நாம் நிறைய கேட்டதுண்டு. நாம் எடுக்கும் நிலை என்னவென்று இதுவரை நாம் மேலே சொன்னதிலிருந்து
சிந்தித்துப் பார்த்தால் சங்கம் வைத்து இலக்கியங்கள் செய்யப்பட்டன என்றாலும் அது மொழியின்
வளமை மற்றும் அழியாத்தன்மையை கொடுக்குமா? பானை செய்யும் மக்கள் தன் பெயரை பானையில்
பொரிப்பதும் சாதாரண ஊர் மக்கள் வெட்டிய கல்வெட்டுகள் போன்றவை நாடாளும் அரசனின் தமிழ்சங்கத்தின்
பிரதிபலிப்பானால் அது இன்று வரை உள்ள தமிழ் பரவலை தகவமைக்க மூல காரணமாக ஆவதில்லை. இந்தியாவின்
மொழிகளை பிரச்சாரம் செய்யவும் அதை தென்னிந்தியாவின் பரவச் செய்யவும் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன
இதை நான் நன்கு அறிவோம். இதனால் மக்களிடம் அதனை எழுதவும் படிக்கவும் அறிவு தோன்றியது
உண்மையே. ஆனால் சரளமாக பேச முடியுமா? என்ற கேள்விக்கு விடை நாம் அறிந்ததே. அங்கு தேவை
என்ற ஒன்று முன்னிலை வகிக்கிறது. பேச வாய்ப்புகள் இருந்தால் அந்த மொழி நடைமுறையில்
மக்களிடம் புழங்கும். இன்றளவும் எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.
அவைகள் தன் இறுதிக்கட்ட நிலையில் ஒரு குடும்பத்தில் பேசக்கூடிய மொழியாக உள்ளது. இந்த
மொழிகளுக்கு எழுத்து வடிவமும் புத்துயிரும் கொடுக்க எத்தனையோ முயற்சிகள் செய்யப்படுகின்றன.
அது தன் வலிமையை வணிகம் மற்றும் சமூக உற்பத்தியில் தன்னை இணைக்காவிடில் அதன் அழிவின்மை
என்பது கேள்விக்குறியே.
சமஸ்கிருதம் என்ற மொழியின் பெயர் ரிக்வேத காலத்தில்
இல்லை. அதற்கு எழுத்து வடிவம் இல்லை. அது ஒலிவடிவம் மட்டுமே கொண்டது. தலைமுறை தலைமுறையாக
மூவாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தொடர்ந்து வருவதற்கு அது ஒலிவடிவில்
இருந்ததே காரணம். ஒலிவடிவத்தில் சிறப்பு அதன் மாற்றத்தை தடுக்கும். மற்றும் அதன் தன்மையை
கூடியவரை மாறாமல் வைக்கும். இருந்தும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பாடபேதம்,
பலதரப்பட்ட சாகைகள் இவை எல்லாம் மாற்றங்களே. ஆனால் இவை எதுவுமே ஒரு மொழியின் மாற்றங்கள்
அல்ல. இவை அந்த கவிதைகளின் உச்சரிப்பில் வந்த மாற்றங்கள். சொல்லும் ராகங்களில் வந்த
மாற்றங்கள். கவிதைகளின் தொகுப்பில் வந்த வரிசை பட்டியலில் மாற்றங்கள். மொழிகளில் மாற்றம்
இது இல்லை என்றால், அவை சகமனிதர்களின் பயன்பாட்டிற்கு தோன்றியவைகளாக அவையில்லை.
ரிக்வேத ரிஷிகள் மற்றும் தேவர்களிடையே நடக்கும்
கவிதைத்தனமான வேண்டல்கள் மற்றும் போற்றல்கள், ஒன்பது மண்டலங்கள் முழுவதும் ரிக்வேதத்தில்
உள்ளது. பத்தாவது மண்டலத்தில் நாம் சிறிது அந்த சமூக காலத்தின் பிற்பகுதியில் உள்ள
கூறுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. அங்கே நிச்சயமாக மொழியின் ஆளுகை விரிவதனால் புதிய
சொற்கள், திறம்படுத்தப்பட்ட சொற்கள் உருவாவது சாத்தியமே.
பல மொழியறிஞர்கள் ரிக் வேதத்தின் 9 மண்டலங்களில்
உள்ள மொழி ஆளுமைக்கும் பத்தாவது மண்டலத்தில் உள்ள மொழி ஆளுமைக்கும் உள்ள வேற்றுமையை
கண்டறிந்தனர் அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிகளுக்கும் இடைப்பட்ட காலம் குறைந்தது
300 லிருந்து
500 ஆண்டுகள்
இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மொழியியல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது
சிந்து சமவெளியில் ரிக்வேதகால ஆரியர்கள் சிந்துசமவெளி மக்களுடன் கொண்ட தொடர்பு ஆகும்.ரெட்ரோஃப்ளெக்ஸ், செரிப்ரல்
மெய்யெழுத்துக்கள் (பின் வளைவு கொண்டவை ட் ண் ள் ழ் இந்த உச்சரிப்புகள்) சிந்து சமவெளி
மக்களுடன் கொண்ட தொடர்பினால் ஏற்பட்டவையாகும். மொழியியல் ரீதியில் இந்த பின்வளைவு உச்சரிப்புகள்
அதிகமாக பயன்படுத்தப்படுவது திராவிட மொழியில் குறிப்பாக தமிழ் மொழியில்.
பிராக்கிருத மொழிகளின் வடிவமைப்பில் நாம் காணுவது
அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கலாம் ஏனெனில் பிராகிருதமும் அர்த்தமாகதியும் நடைமுறையில்
மக்கள் பேசிய மொழியாகவே இருந்தது. இதன் நன்கு மேம்படுத்தப்பட்ட வடிவமாக சமஸ்கிருதம்
ஆகலாமே தவிர. சமஸ்கிருதத்தின் பிராந்திய மொழியாக மற்ற மொழிகளை கொள்ளல் என்பது விவாதத்திற்குரிய
ஒன்றாகும். மொழியும் அதன் புதிய சொற்களும் இயக்கம் உள்ளவையாக இருத்தல் வேண்டும். அதற்கு
அந்த மொழியானது தேசங்களை கடந்து கடல்கடந்து பலநாடுகளில் சென்று பேச்சுமொழியாக இருத்தல்
வேண்டும். அப்படி அவை ஆகும்பொழுது அங்குள்ள புதிய சொற்களையும் சொல்லாடல்களையும் தனது
மொழியில் ஏற்றுக்கொண்டு அதற்கு இணையான சொற்களை உருவாக்கும் தன்மை ஒரு மொழிக்கு வேண்டும்.
இன்று நாம் உபயோகிக்கும் பல விஞ்ஞான சாதனங்களின்
சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இதில் நம்மை விட முன்னேறி இருக்கும்
மொழி சீனமே ஆகும். சாணக்கியர் காலத்தில் அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் புதிய சொற்கள்
உருவாக்கபட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. பாணினி சமஸ்கிருத இலக்கணம் என்பது அந்தமொழி
இயக்கத்திற்கு உள்ளானதையே குறிக்கிறது. இதுபோலவே நமது திராவிடமொழி குடும்பத்தில் உள்ள
மொழிகளிலும் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. ஒரு மொழியின் பறந்து விரிந்த விசாலத்தன்மை
அது பல மொழி வார்த்தைகளை மற்றும் சொல்லாடல்களை ஒரு பொதுவான வகையில் உபயோகிக்கும் முறையை
நம் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகிறது.
“ வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே "
(தொல்காப்பியம். சொல்லதிகாரம். எச்சவியல்).
தொல்காப்பியத்தில் வடமொழி சொற்களை (வடசொல்) கையாள்வது
தொடர்பாக மிகவும் தெளிவான மற்றும் நுட்பமான இலக்கண விதிகள் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர்
வடசொற்களை தமிழில் பயன்படுத்த அனுமதித்தாலும்,
அவற்றை தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றியே பயன்படுத்தவேண்டும்
என்றார்.தொல்காப்பியர் சொற்களை நான்கு வகையாகப் பிரித்ததில் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்), வடமொழிச்
சொற்களை "வடசொல்" எனக் குறிப்பிடுகிறார்.வடசொற்களைத் தமிழில் எழுதும்போது, தமிழில்
இல்லாத வடமொழி எழுத்துக்களை (உதாரணமாக: ஷ, ஸ, ஜ, ஹ, க்ஷ) தவிர்த்து எழுத வேண்டும்.
வடசொற்கள் தமிழில் வரும்போது, தமிழ்
எழுத்துக்களாலும், தமிழ் ஒலிப்பு முறையாலும் புணர்ந்து வரவேண்டும்.
அதாவது, வடமொழியின் ஒலிப்பு முறை அப்படியே தமிழில் இருக்கக்கூடாது.தொல்காப்பியர்
காலத்தில் வடமொழி (சமஸ்கிருதம்) செல்வாக்கு பெறத்தொடங்கியதால், தமிழோடு
நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அம்மொழிச்சொற்களை எப்படிக்கையாள வேண்டும் என்று அவர்
வரன்முறை செய்துள்ளார்.மணிப்பிரவாளநடை போன்ற மொழியியல் மாற்றங்கள் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில்
தொடங்கியது. இது தொல்காப்பிய இலக்கணத்திற்கு உட்படாத ஒரு முறையாகும்.
மனிதனைப்போலவே மொழியும் தன் தோற்றம் என்பது எங்கு
தொடங்கியது என்று அறுதியிட்டு சொல்லுதல் இயலாது. ஏனெனில் இயக்கமும் இடம்பெயர்வும் தான்
மனிதஇனத்தை இவ்வளவு தூரம் முன்னேற்றிருக்கிறது. இடப்பெயர்வு என்பது அனைத்து மதப்புராணங்களில்
உள்ள பொதுத்தன்மையாக உள்ளது. மனிதனின் மொழியின் படிநிலை வளர்ச்சிகள் பற்றிய யாதொரு
பதிவும் புராணங்களில் இருப்பதுபோல் தெரிவதில்லை. ஏனெனில் படிநிலை வளர்ச்சி என்ற ஒன்றையே
மதங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் ஹெகலின் இயக்கவியலை விட டார்வின் பரிணாம
தத்துவமே மதத்தின் மேல்விழுந்த ஆகப்பெரும் அடியாகும். தமிழ் மொழியில் உள்ள “கல்தோன்றி
மண்தோன்றா காலத்தே” என்ற சொற்றொடர் படிநிலை வளர்ச்சியை ஏற்க்காத ஒரு
சிந்தனை. இதை முதல் திணையில் உருவான மொழி என்று ஏற்கவேண்டியுள்ளது. முதல் திணையான குறிஞ்சியில்
சங்கம் இல்லை மன்னன் என்பவன் தோன்றியது மருதநிலத்தில்தான். சங்கம் என்பது ஆதிக்குடி
இனக்குழுக்களில் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதிலிருந்து ஒரு மொழியை சங்கம்
வைத்து வளர்க்கமுடியாது என்பது திண்ணமாகிறது. இந்த மொழி இங்குதான் புழங்கிற்று என்றும்
கூற இயலாது. வரலாற்றில் மொழியின் பங்கு மன்னர்களால் தழைத்தோங்கியது என்ற எண்ணம் எந்த
வகையிலும் மொழியையும் மரபையும் சரியான நிலைக்கு கொண்டு சேர்க்காது.
சிந்துவெளிமக்கள் மொழி என்ன என்று ஆராய்ச்சியில்
கிடைத்த குறியீட்டு முத்திரைகள், வரலாற்று குறிப்புகள் மற்றும் ரிக்வேத குறிப்புகள்,
தமிழகத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்வுகள் மூலம் ஒருமுகப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வருங்காலத்தில்
இன்னும் பல செய்திகளை தரலாம். நமது கீழடியில் கிடைத்த பானை ஓட்டு குறியீடுகள் சிந்து
சமவெளி குறியீடுகளுடனும் ஒத்திருக்கின்றன. இதை நாம் திராவிட மொழிக்குடும்பம் என்று
சொல்வதே சாலச்சிறந்தது. ஆனால் நாம் ஒரு நிதர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டிய உள்ளது.
வரிவடிவங்கள் படிக்கும் பொழுது அதில் ஏற்படும் உச்சரிப்பு அர்த்தப்பிழை இவை அனைத்தையும்
கடந்த பல ஆயிரம் ஆண்டு முன்னர் உள்ள வரிவடிவம் குறியீடுகளை படித்தல் என்பதில் உள்ள
உழைப்பும் அதன் அர்த்தம் புரிதலும் அளப்பரிய ஒன்றாக கருத வேண்டும். மனிதனின் மாபெரும்
திறமைகளில் ஒன்றாக இதை காண வேண்டும். ஒரே வரி வடிவம் கொண்ட பல மொழிகள் மற்றும் வரிவடிவங்களில்
இருக்கும் படிநிலை வளர்ச்சியும், இடத்திற்கான மாறுபாடுகளையும் கருத்தில் கொண்டு செய்யப்படும்
ஆய்வுகள் மாபெரும் சாதனையாகும்.
ஒரே வரிவடிவம் கொண்டு வெவ்வேறு மொழிகளை கொண்ட கல்வெட்டுகள்
மற்றும் அதன் மொழியியல் ஆய்வுகளை அடுத்து வரும் ஒரு ஆய்வு கட்டுரையில் காணலாம்.
Comments
Post a Comment