இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 4
அறிவின் மேல் மனம் படர்தல்
விஞ்ஞான லோகாயதவாதத்தில் மூளையின் செயல்,
சிந்தனை என்ற ஒன்றே உள்ளது. மனம், அறிவு என்று இரண்டில்லை. மனம் என்ற ஒன்று ஏன்
இவ்வாராய்ச்சிக்கு எடுத்தோம் என்ற விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.புலன்களால்
அறிந்து யதார்த்த சிந்தனையுடன் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் அறிவு என்றாலும் இங்கு
இதை அனைவராலும் செய்ய முடியாமல் போகுமாதலால், ஆராய்ச்சியை தவிர்த்து புலன்களால் அறிந்து
யதார்த்த சிந்தனை மற்றும் தெளிவு கொள்ளலை அறிவு என்று வைத்துக் கொள்வோம்.
இப்போது மனம் மற்றும் அறிவின் விளக்கம்
கொடுத்தாகி விட்டது, பல நேரங்களில் கருத்துமுதல்வாதத்தின் வெற்றியாக இந்த நிலை
தோன்றுகிறது.மனதின் ஆதிக்கம் அறிவைத் தாண்டியும் அதிகமாக
இருப்பதற்கு, “தேவை” என்ற ஒன்று மட்டும் தான் காரணம் என்று
இல்லை, மனிதன் கொண்ட பயமும் ஒரு காரணமாக அமைகிறது.
இந்த “பயம்” தேவையைத் தாண்டிய ஒன்றாக அமைகிறது (புத்தர்
தன் உரைகளில் பயபைரவன் பற்றியும், அமாவாசை இரவை பற்றியும் கூறியுள்ளார்). நான்
பயத்தை முதல் அங்கத்திலேயே ஒரு கூறாக சேர்க்காமல் போனதற்கு ஒரு காரணம் உள்ளது. ரமணரை
தவிர பக்தி மற்றும் ஞானமார்க்கத்தில் வருவதற்கு மரண பயம் ஒரு காரணமாக யாருமே வெளிப்படையாக
கூறிக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் ரமணர் ஓரளவேனும் உண்மையை கூறினார் என்பது
ஆனந்தமே. பக்தபிரகலாதன், திருநாவுக்கரசர் ஆகியோர் நமனே அஞ்சோம் என்று கூறியதாலும்
மரணபயம் என்பது இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டே உள்ளது. இவர்களின் மரணபயம்
நீங்க காரணம் இவர்கள் அறிவின் பாதையில் இருந்து வெகுதூரம் விலகி மனதில்
ஆதிக்கத்தினால் பக்தியில் ஈடுபட்டது. (பக்தி என்பது வரலாற்றில் எங்காவது
சமுதாயத்தில் உள்ள நிறைகுறைகளை கண்கொண்டு கண்டுள்ளதா? என்பதை ஐயமே. அவை முழுவதுமாக
புலன்களை விடுத்து தனக்கென ஒரு மாய உலகத்தை தோற்றுவிடத்து வாழ சொல்லிக்கொடுக்கிறது).
ஆனால் இன்று பொருளாதார ரீதியாக மாபெரும் ஆதிக்கத்தை பக்தியே செலுத்துகிறது. அதன்
ஆணி வேராக இருப்பது பயம் மற்றும் மரணபயம் என்பதே உண்மை. ஞாயிற்றுக்கிழமை ராகுகால
நேரங்களில் உங்களால் பல கோவில்களில் சத்ருசம்ஹார வழிபாடுகளில் மக்களை காண
முடியும். இந்தக் கூட்டத்திற்கு பயம் மற்றும் சகமனிதர்களும் உள்ள வெறுப்பு என்ற
ஒன்றை காரணமாக உள்ளது. போர்க்காலங்களிலும் கொள்ளை நோய்வரும் நேரங்களிலும் மரண பயம்
அதிகமே. ஆனால் இவைகள் மனதில் கொடுக்கும் பிரதிபலிப்பு வேறாக உள்ளது. சிலருக்கு
இந்த மரணபயம் கடவுள் தேவைக்கு வழி வகிக்கிறது. பலருக்கு அது கடவுளின் இருப்பையே
கேள்வி கேட்க வைக்கிறது. இதை கண்கூடாக நாம் கொரோனா காலங்களில் கண்டதுதான்.
கண்ணுக்குத் தெரியக்கூடிய நிலையில், உடம்பில் மண்டையோட்டு மாலையுடன் தீ பொங்கும்
நாவை கொண்டு பெரும்வாள் எடுத்து அந்தக் காளி வந்திருந்தால் கூட மக்களின் பயம்
கொரோனா காலத்தில் இருந்ததை விட குறைவாகவே இருந்திருக்கும். எல்லா மதங்களிலும்
மரணத்துக்கு பின் என்ன என்பது மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவை ஒரு ஒளி
பொருந்திய விளக்கினை விட்டில் பூச்சிகள் அடைவதைப்போல மக்கள் தங்கள் மனதில்
வசத்தால் அடைகின்றனர். இந்துதத்துவவியலில் மிக முக்கியமாக உபநிடதங்களில் உள்ள
இம்மை-மறுமை, பிரம்மதத்துவம் ஆகியவை மற்றும் அதன் அரசியல் தேவைகள் பற்றி வால்கா
முதல் கங்கை வரை நூலில் ராகுல்ஜி பிரவாஹன் என்ற கதையில் எளிமையாகவும் தெளிவாகவும்
விளக்கியுள்ளார். மொத்தத்தில் இம்மை மறுமை மறு பிறவி என்பது கிடையாது எல்லாம் ஒரு
வசீகரிக்கும் யுக்திகளை ஆகும். அடுத்த காரணம் “சமூகக்கட்டுப்பாடு”, இவற்றில் விதிகளைப்பின்பற்றுதல், சடங்குகள், மூடப்பழக்கவழக்கங்கள்,
தீண்டாமை, சாதிப்பாகுபாடு இவை எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இதை
இன்னும் விரிவாக அடுத்து பார்க்கலாம்.
புதிய சிந்தனைக்கு பூட்டு
மனிதன் தன் அறிவினாலும் அறத்தைக்கொண்டு செய்யும் செயல்களினாலும் பல நேரங்களில் ஆஸ்திகர்களின் எதிர்ப்பைத் தேடிக்கொள்கிறான். கடவுள் நம்பிக்கை மற்றும் ஆஸ்திகர்களின் பின்னால் நிலப்பிரபுக்கள் அல்லது அதிகார வர்க்கங்களின் கை ஓங்கி உள்ளது. இது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சடங்குகள், மூடநம்பிக்கை, இம்மை-மறுமை, ஆன்மா, பிரம்மம் இவையெல்லாம் எவ்வாறு அதிகாரம் மற்றும் பணம் படைத்த பிரபக்களுக்கு தொடர்பு உள்ளது? வால்கா முதல் கங்கை வரை நூலில் ராகுல்ஜி பிரவாஹன் தான் இதற்கு பதில்.இக்கட்டுரையில் முதலில் தேன்துளியை சுவைத்தவனை ஆன்மீகம் எப்படி பார்த்ததோ, அதுபோலவே எபிகுரியர்களையும் கிரேக்கத்தில் பார்த்தனர். இந்த உலகம் இன்பமயமானது, அதை நன்றாக அனுபவிக்கலாம் என்று எபிகுரியர்கள் கூறினர். இந்தியாவின் சார்வாகர்களும் எபிகுரியர்களும் ஊதாரிகள், தர்மத்தை பின்பற்றாதவர்கள் மற்றும் சமுதாயத்தில் இவர்களுடன் பாதுகாப்பாக வாழ இயலாது, போன்ற தோற்றத்தை ஆன்மீகவாதிகள் ஏற்படுத்தினர். அதற்குத்தேவையும் இருந்தது. எபிகுரியர்களின் பரமாணு தத்துவம் டெமோகிரதுவினுடையது. இது அறிவியல் சார்ந்ததாகவும் கருத்துமுதல்வாத எண்ணத்தை எதிர்க்கும் படியாகவும் இருந்தது. மனச் சிந்தனையை மடைமாற்றம் செய்தவர்கள் புதிய சிந்தனைக்கு பூட்டிடாமல் போவார்களா? பகுத்தறிவுவாதிகள் நிந்திக்கப்பட்டனர். அவர்களின் கண்ணியம் என்றுமே உரைத்துப் பார்த்து சரியில்லை என்றே கூறப்பட்டது. இந்த யுக்தி இன்றளவும் பலராலும் உபயோகப்படுத்தப்படுகிறது. எங்கள் நகரில் "மெய்யுணர்வு மையம்" என்று ஐந்து நாள் பட்டறை வகுப்புகள் நடந்தன. மலேசியாவைச் சேர்ந்த ஒரு கார்ப்ரேட் குரு (அவர் நன்றாக அறிதுயில் நிலை அல்லது மனோவசியம் தெரிந்தவர்) எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் கையாண்டு வந்தார். சிலரைப் பார்த்து இதுதான் உன் கடைசி பிறவி என்று கூறுவார், சிலரை பற்றிய சில தகவல்களை கூறிக் கொண்டே வருவார். ஒருவர் தன்னைப் பற்றி ஏதாவது கூறினால் தான் நான் நம்புவேன் என்றார். குரு பலமுறை மறுத்த பின்னர் கடைசியாக அவரிடம் "திருமணத்துக்கு பின்பும் ஏன் இந்த வேண்டாத உறவு" என்று கூறினார். கேள்வி கேட்டவர் அமைதியானார். பின்னர் அவர் ஒன்றுமே பேசவில்லை. இந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரும் மந்திரிக்கப்பட்ட கோழியைப்போல் அந்த மனிதரை அருவருடன் கண்டனர். அவர் அப்படித்தான் செய்திருப்பார் என்று அனைவரும் நம்பினர். இதை கண்டுபிடித்த அந்த கார்ப்ரேட் குரு கலியுக கடவுளாகவே வணங்கப்பட்டார். "ஹூ ஹூ" என்ற தாரக மந்திரத்தை அனைவரும் கூவினர். தேவர்கள் வானில் இருந்து புஷ்பவர்ஷம் செய்தனர். இதை எந்த புராணத்தில் சேர்க்கலாம் என்று வியாசர் யோசித்துக் கொண்டிருந்தார்.கேள்வி கேட்டவரின் மௌனம் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை கவனித்தால் உங்களுக்கு எல்லாம் விளங்கும். ஒருவரைப் பற்றிய செய்தியை சொல்வதை விட அவரின் தன்மானத்தையும் தன்னம்பிக்கையையும் குலைப்பது, அமைதியாக அமர வைப்பது என்று தெரிந்தால் போதும். இந்தக் கார்ப்பரேட் குருவிடம் இன்றளவும் அவரிடம் தேவையில்லாமல் கேள்வி கேட்பவர்கள் வாயை மூட்ட பல தொழில் ரகசியங்களை வைத்திருக்கிறார். ஆம் அவர் ஒரு நவயுகரிஷிதான். பிரம்மவாதத்தின் போது “கார்க்கிவாசக்னவி” கேட்ட கேள்விக்கு “யாக்யவால்கியர்” கொடுத்த பதில் இது போலவே ஆகும். உன் உடம்பில் உன் தலை இருக்காது என்று கூறும் தைரியம் யாக்யவால்கியரிடம் இருந்தது ஏனெனில் அவர் முன் மிதிலாதேசத்து அரசன் ஜெனகன் கைகட்டி நின்றான்.இன்று பல கார்ப்ரேட் குருக்கள் அப்படி நேரடியாக சொல்வதை தவிர்த்தாலும் அவர்கள் அப்படி செய்யக்கூடியவர்களே ஆகும்.
x
Comments
Post a Comment