Skip to main content

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 3

 இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 3

மனச்சிந்தனையை எப்படி மடைமாற்றம் செய்கிறார்கள்

இதுவரை தேவை,ஆசை,இன்பம்,துன்பம்,லஹரி,பணம்,அதிகாரம்,செல்வாக்கு,போற்றுதல், குறைந்த உழைப்பில் அதிக பலன் மற்றும் இவைகளை அடைய தர்மம் என்ற கயிறு இவைகளைபற்றி பார்த்தோம்.மனச்சிந்தனை என்பது தனக்குள் எழுவது மட்டுமேயின்றி, சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. சிந்தனையும் பகுத்தறிவும் தான் ஒருவனை மனிதனாக வைக்கிறது.

 

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

 

தொல்காப்பியம்

ஓரறிவு - உற்றறிதல் (தொடுதல் உணர்வு) - புல், மரம்

ஈரறிவு - உற்றறிதல் + சுவைத்தல் - சிப்பி, நத்தை

மூவறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் - கரையான், எறும்பு

நான்கறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் - நண்டு, தும்பி

ஐந்தறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் - பறவை, விலங்கு

ஆறறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் +பகுத்தறிதல் – மனிதன்

மனச் சிந்தனை ஒன்றுதான் மனிதனை அனைத்து விலங்குகளிடமிருந்தும் வேறுபடுத்தி காட்டுகிறது.உழைப்பு ஒன்று தான் மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது என்பதே மார்க்ஸ் மற்றும் எங்கெஸின் முடிவு, உழைப்பிற்குப் பின்னே சிந்தனை.ஏனெனில் தொல்காப்பியம் தொகுக்கப்பட்ட காலம் நிச்சயமாக நில பிரபுத்துவ காலம் அல்லது முதிர்ச்சியுற்ற தந்தைவழிச்சமுதாய காலமாக இருக்கலாம். சிந்தனை, உபரி, உழைப்பு என்பது மருதத்திணையின் மாபெரும் கொடை.

அதிகாரம் பெரும்பாலும் மனச்சிந்தனையின் மடைமாற்றத்தையே நம்பியுள்ளது. அதற்கு ஆசை,இன்பம்,துன்பம்,லஹரி,பணம்,அதிகாரம்,செல்வாக்கு இவை எல்லாம் உதவுகின்றன.சுருக்கமாக பார்ப்போம்.நகரங்களில் சொந்தஇடம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் அப்படியே பலகாலம் தொடர்ந்து இருக்க அதிகாரம் விரும்புகிறது. இவர்களின் மன சிந்தனையை மடைமாற்றம் செய்ய லஹரியும், பணமும் அவ்வப்போது கிடைக்கிறது. இம்மனிதன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? நல்ல குடியிருப்பு நல்லவாழ்க்கை என்று எண்ணாத அளவுக்கு மனச்சிந்தனை மடையமாற்றம் செய்யப்படுகிறது. அவன் கேள்விகேட்டால் இருப்பதும் இல்லாமல் போய்விடும். வண்ணாரப்பேட்டையில் இருக்கும் அநேகமான அறக்கட்டளைகள், மருத்துவம் மிகக்குறைந்த விலையில் ஐந்துரூபாய் அல்லது பத்துரூபாய்க்கு கண் சிகிச்சை மற்றும் பொது சிகிச்சைகளை தருகிறது. மேலும் உண்ண உணவும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. சென்னையில் மற்ற இடங்களில் இல்லாமல் இந்த இடத்தில் மட்டும் ஏன் இவ்வளவு குறைவான விலையில் ஒருவன் மிக சாதாரண வாழ்க்கையை வாழும் நிலையுள்ளது என்று நாம் யோசிப்போமேயானால், அதன் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் பலம் புரியும். இங்கு இருக்கும் அநேகர மக்களின் வாழ்வாதாரம்  மூட்டை தூக்குதல், கூலிவேலை செய்தல் ஆகியவற்றை சார்ந்ததாக உள்ளது. இவர்களில் நாள்சம்பளம் மிகவும் குறைவானது, அது அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லாதவாறு அங்கு உள்ள பணம் படைத்த அதிகாரவர்க்கம் பார்த்துக் கொள்கிறது. கிடைக்கும் வருமானத்தில் நிறைவாக உணவு, மருத்துவம் ஆகியவற்றை பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கினால் சம்பள உயர்வு அல்லது புரட்சியோ அங்கு ஏற்படவே ஏற்படாது, என்பதை அதிகாரவர்க்கம் நன்றாக புரிந்து வைத்துள்ளது. இங்கு கிடைக்கும் சம்பளத்தில் உணவு, மிகக்குறைந்த தரத்தில் உடை மற்றும் தங்குமிடம் என்பது சுகாதாரமற்ற பகுதியாக உள்ளது, இருந்தும் மருத்துவம் மிகக் குறைந்த விலையில் அல்லது இலவசமாக கிடைப்பதால் இங்கு அதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

 மனம் எதை நம்பும்?

மிகவும் கடுமையான கேள்வி! மனம் எதை விரும்பும்? எதை செய்யும்? எதை எப்பொழுது வெறுக்கும்? இவை எல்லாம் மனிதனுக்கு காலம், இடம், தேவைக்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டிருப்பதை நாம் காணலாம். பெரும்பாலும் ஒரு சமூகநம்பிக்கையை, குடும்ப பழக்கவழக்கங்களை, சிறுவயது முதல் உள்ள பழக்கவழக்கங்களை மனம் அதிகம் நம்பும் தன்மை கொண்டது. பெரும்பாலும் அச்சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்பது உள்ளது. பெற்றோரின் குணங்களில் சில மரபணு பண்புகள் தொடர்கிறது என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகக்குறைவானது. உதாரணமாக கடவுள் வழிபாடு, சடங்குகள், சாதி பாகுபாடு, தீண்டாமை, பெண்அடிமை, மதவேறுபாடு,தேசிய உணர்வு,மனிதநேயம்,அறம் இவைகள் சமுதாயத்தின் மூலமாகவே வருகிறது.

மனித மனத்தின் நம்பிக்கையை பொறுத்தவரை தேவை என்ற ஒரு வார்த்தை மிக எளிமையாக கடந்து போகக் கூடியது அல்ல. ஒரு மனிதனின் தேவையே அவன் எதை நம்புகிறான் என்பதைப் பொறுத்து இருக்கிறது. தேவை ஆசையாக மாறும் பொழுது அவன் பெரும்பாலும் தன் சுய உணர்வை தாண்டி, அளவற்ற உணர்ச்சி கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறான். சமுதாயத்தில் தான் பங்களிப்பு என்ன? என்பதை மறந்து சுயத்தேவைக்காக அவன் எதையும் செய்யத்துடிக்கிறான். அதையே அவள் சரி என்றும் நம்புகிறான். ஒவ்வொரு மனிதனின் நன்மையும் தீமையும் மாறுபடுவதற்கு காரணம் அவனின் தேவையில் ஏற்படும் மாற்றங்களே. தனிமனிதனின் தேவை என்பதை தாண்டி, ஒரு சமூகத்தின் தேவை என்ன என்பதை சிந்திக்கும்போதுதான், மனிதன் மனம் அறம் சார்ந்த சிந்தனையாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2  மனித மனம் எப்படிப்பட்டது ?   இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது . அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது) . இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது. இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும்...