Skip to main content

புருகூதன்

புருகூதன் 

இடம்: வட்சு நதிக்கரை 

இனம்: ஹிந்து ஈரானியர் 

காலம்: கி.மு 2500. 

கடந்த மூன்று கதைகளிலும் நாம் சமுதாய நோக்கிலேயே அணுகினோம். சமுதாயக் கட்டமைப்பு அதன் பொருள் உற்பத்தி, உறவுகள், வர்க்கம், தொழில்கள்,வாழ்வியல் போன்றவற்றை நாம் பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் நிலவியலை பார்க்கலாம். முதலில் தொடங்கிய சமுதாயம் வால்தாய் மலை பள்ளத்தாக்கில் உள்ள வால்கா நதிக்கரை பிரதேசமாக உள்ளது. இவர்கள் இந்தோ-ஐரோப்பியர்கள் போன்டிக் காஸ்பியன்-ஸ்டெஃபி புல்வெளியை சேர்ந்தவர்கள். இவர்கள் வரலாற்றில் புரோட்டோ இந்தோ-ஐரோப்பியர் என குறிப்பிடப்படுவர். இது இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசும் ஒரு இனக்குழுவை குறிக்கலாம். (ஆரியர்கள் ஒரு இனக்குழு அல்ல என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது ஒரு மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மொழியியல் ரீதியாக ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். என்றாலும் இனக்குழுவும் அதன் கிளை மொழிகளும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதால் அவர்களை இனக்குழு என்று சில இடங்களில் குறிப்பிட வேண்டி உள்ளது). ஜெர்மனியர், ஸ்லாவிக், இந்தோ-ஈரானியர் போன்ற 150 க்கும் மேற்பட்ட மொழி குடும்பத்தில் முன்னோர்களாக இருந்தவர்கள். இவர்கள் வால்கா நதி பிரதேசத்தில் இருந்து வட்(க்)சு நதி கரைக்கும் அதன் பின்னர் சுவாத(சுவாட்)நதிக்கரைக்கும், மத்திய ஆசியாவிற்க்கும் ஸ்டெஃபி புல்வெளி வழியாக வந்தனர் என்பது இந்நூலிலிருந்து புலனாகிறது. அங்கிருந்து சிந்து நதியை தாண்டி யமுனை மற்றும் கங்கை நதிக்கரை வழியாக தங்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். 

புருகூதன் கதையில் நன்றாக வளர்ந்த தந்தை வழி சமுதாயமும், கால்நடை வளர்ப்பும், விவசாயம் மற்றும் வணிகமும் செய்ததாக தெரிய வருகிறது. அடிமைச் சமுதாயத்தின் ஆரம்ப காலமாக இது தெரிகிறது. நாடோடிகளாய் வாழ்ந்த ஆரியர்களின் சில பிரிவினர், இந்த அடிமை முறையை எதிர்த்ததாகவும் தெரிகிறது. ஒரு சமுதாய மாற்றம் என்பது சிலரின் விருப்பு வெறுப்புகளுக்காக மாறுவது இல்லை. அது பொருள் உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளை பொருத்தே அமையும். 

செம்பு காலம்:

இக்காலத்தில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது. நிலத்தை உழும் கருவிகள் வாள் மற்றும் பல ஆயுதங்கள் செம்பில் உருவாக்கப்பட்டன. இவை பண்டமாற்று முறையில் வெளிதேசத்திலிருந்து வாங்கப்பட்டதாக இருக்கலாம். அப்படியெனில் இவர்களை விட முன்னேறிய ஒரு சமுதாயம் இருந்திருக்கக்கூடும். வடகுருதேசம் என்பது மத்திய ஆசிய பகுதியான கசகஸ்தான் பகுதிகளை குறிக்கிறது(சிந்து முதல் கங்கை வரை). இதற்கு அருகில் உள்ள முன்னேறிய ஆரியர் அல்லாத சமூகம் எதுவென்பது தெரியவில்லை. தொலைதூர தெற்கில் சிந்து வெளி நாகரிகமும் சுமேரிய வழித்தோன்றல் நாகரிகமும் இருந்தது. இங்கிருந்துதான் இவர்கள் செம்பு உலோகம் வாங்கி இருக்க வேண்டும்(ஆசிரியர் யம்னாயா மற்றும் சிந்தாஷ்டா இனக்குழுவை கணக்கில் கொள்ளவில்லை) . இந்த மாபெரும் தெற்கு நோக்கிய பயணம் ஆரிய மக்களுக்கு நிலவியல், நாடு கடந்து செல்லும் வழி, மற்றும் ஈரானிய-சிந்து சமவெளி பண்பாடுகளை ஓரளவு அறிவதற்கு உதவிய இருக்கலாம். தங்களின் குதிரைகளை பண்டமாற்றாகக் கொண்டு அவர்கள் செம்பு தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை வாங்கி இருக்கலாம். 

இந்த காலத்தில் கிராமங்களில் தோற்றம் உருவானது. இதுவரை நிரந்தரமாக ஒரு குடியை அமைக்காத இந்த இனக்குழுவினர் கிராமங்களை அமைத்து அங்கு தங்கினார்(கிராமம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. இரண்டு கிராமங்கள் சேர்ந்தால் சண்டை ஏற்படும் என்று அர்த்தத்தில் "ஸங்கிராமம்" என்ற பெயர் சண்டைக்கு கொடுக்கப்பட்டது. தமிழ் மரபில் கிராமம் என்ற சொல் இருக்காது மேலும் இரண்டு கிராமங்கள் சேரும் இடத்தில் சண்டை என்பதும் இருக்காது. இது பண்பாட்டின் வேறுபாடாகும்).இதனால் சில சுகாதார சீர்கேடுகளும் மற்றும் பல நோய்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட இந்த குழுக்கள் ஒரு இடத்தில் இருந்ததால் எல்லைகளை வரையறுத்து அதற்குள் கால்நடை மேய்ச்சல் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை அமைக்கவும், பல தலைமுறைகளாக இடம் பெயராததால் இவர்கள் கிராமங்களை அமைத்து அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. முதல் முதலாக இதுதான் ஆரம்ப கால ஆட்சி முறையின் விதையாக இருந்திருக்க வேண்டும். நாடோடியாக இருந்த இனக்குழுக்கள் ஓர் இடத்தில் தங்குவதால் ஏற்படும் சாதக பாதகங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி இருந்தது. 

இந்தக் கதையில் புரு குலத்தவரின் உழைப்பை எவ்வாறு கீழ் மத்ரர்கள் சுரண்டி இருக்கின்றனர் என்றும், அடிமைகளின் வருகை, பொருள் உற்பத்தி மற்றும் அந்தச் சமுதாயத்தில் எந்த மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை பற்றியும் நூல் ஆசிரியர் விளக்கி இருக்கிறார். இயக்கவியலின் விதிகளின்படி இதை நாம் சிறிது ஆராய்ந்து பார்க்கலாம். 

இயக்கவியலின் விதி

முரண்பாடுகளின் இணைப்பு

செம்பு காலத்தின் காரணமாகவும் சமநிலத்தில் இருந்ததினாலும் கீழ்மத்ரர்களும், பர்ஷு இனத்தவரும் கோதுமை விவசாயம் செய்தனர். விவசாயம் பொருள் உற்பத்தி மற்றும் உபரியை உருவாக்கியது. இந்த உபரியை பண்டமாற்று முறையில் புரு மற்றும் மேல்மத்ரர்களுக்கு குதிரையை மட்டும் கம்பளி ஆடைகளுக்காக விற்றனர். இந்த வாணிபத்தில் உணவு தேவை என்பது மற்றொரு உணவின் பண்டமாற்றாக இல்லாமல் குதிரை, கம்பளி ஆடையாக இருக்கிறது. அதனால் கீழ்மத்ரர்கள் குறைந்த தானியத்தை அதிக விலைக்கு விற்க முடியும். ஏனெனில் உற்பத்தி பொருள்கள் மீது அவர்கள் தம் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். முதலில் பொய் என்பது வணிகத்தில் தான் உருவானது என்பது ஆசிரியரின் கூற்று.

சமவெளிக்கு மேல் உள்ள பகுதியில் புரு மற்றும் மேல்மத்ரர்களின் வசிப்பிடமாகும். அவர்கள் சமவெளிப் பகுதியில் வசிக்கும் கீழ்மத்ரர்களின் எல்லையை தாண்டியே வெளி உலகத் தொடர்பை பெற முடியும். இந்த நிலவியல் காரணமாக புருக்களின் அனைத்து பொருட்களையும் வெளிச்சந்தையில் விற்கும் வணிகர்களாக கீழ்மத்ரர்கள் இருப்பதால் விலை நிர்ணயம் பொருள் மதிப்பு ஆகியவற்றின் அதிகாரம் அவர்களிடம் இருந்தது. இதனால் உழைப்பு சுரண்டல் அதிகமாக ஏற்பட்டிருக்கலாம். 

சமையலுக்கான செம்பு பாத்திரத்தை ஒரு குதிரையை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை விலை மதிப்பிற்கு இது நல்ல உதாரணம். ஒரு குதிரையை உணவாகக் கொண்டால் அது ஒரு மாதம் வரை வரும் எனவும் சவாரி செய்ய பத்து வருடம் வரும் தினமும் நூலில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து செம்பின் விலை கீழ்மத்ரர்கள் மற்றும் பர்ஷு குழுவால் எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டது என்பது புரிகிறது. முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. கீழ்மத்ரர்கள் அடிமைகளை கொண்டுவந்து பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு விவசாயம், கம்பளி நெசவு, செம்பு உலோக வேலைகள் செய்தல் போன்ற தொழில்களுக்கு அடிமைகளை அமர்த்தியதால், அவர்களின் வணிகமும் வருவாயும் உயர்ந்தது. பொருளீட்டல் அதிகமானதால் குலங்களுக்கு இடையே ஒரு பொருளாதார வேறுபாடு தோன்றலாயிற்று. புரு மற்றும் மேல்மத்ரர்களின் பொருட்கள் மிக நேர்த்தியான கைவினை கலையாலும், உழைப்பாலும் செய்ததால் அதற்கு அதிக விலை தேவைப்பட்டது. அடிமைகளை வைத்து செய்யப்படும் பொருள்களின் தரம் குறைவாக இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விதை குறைவாகவும் இருந்தது. இது போன்ற முரண்பாடுகளால் இனக்குழுவின் இடையே பல கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட்டன. இதுவரை முரண்பாடுகளின் இணைப்பு பற்றிய விதியை புரிந்து கொண்டோம். 

அளவு மாற்றம் பண்பு மாற்றம்

இந்த சூழ்நிலையில் கீழ்மத்துறார் மற்றும் பர்ஷு குலங்களின் பொருள் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டாலும் சமுதாயத்தைப் பொறுத்தவரை ஒரு கட்டுக்கோப்பான ஒற்றுமையான ஒரு சமுதாயமாக அமையவில்லை. அனைவரும் பொருள் ஈட்டல் மற்றும் வணிகத்திலேயே கவனம் செலுத்தியதால் போர்க்கலை மற்றும் வேட்டையாடும் திறமையில் பின் தங்கிய நிலையில் இருந்தனர். புரு மற்றும் மேல்மத்தரர்கள் இடையே கட்டுக்கோப்பான சமுதாயமும் ஒழுங்கும் இருந்தது. அவர்களுக்கு இன்னும் சில காலங்களில் நம் குலம் அழியக் கூடும் என்ற பயமும் இருந்தது. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவர்கள் போராட தயாராயினர். ஒற்றுமையாக சேர்ந்து போராட முடிவு எடுத்தனர். இந்நிலை ஒரு புரட்சியாக ஒரு பாய்ச்சலாக உருவானது. அளவு மாற்றம் பண்பு மாற்றமாகும் என்பதை இங்கு கண்டோம். 

புருகூதன் இந்தக் கூட்டணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டான்.புருகூதன் ஒரு சாகெமாக, பசிலியஸாக இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரு இந்திரனாக தோன்றிய காலம் இது. 

பண்பு மாற்றம் என்பது எந்தெந்த படிநிலைகளில் எப்படி இருந்தது என்று பார்க்கலாம். தாய் வழி சமுதாயத்தின் குலங்கள் இடையே எந்த உறவு முறையோ நட்பு முறையோ இல்லாமல் இருந்தது. எல்லை வரையறை காரணமாக விரோதப் போக்கில் நீடித்தது. பின்னர் அது சிறிதாக மாறி குலங்களுக்கு இடையே உறவு முறை தோன்றியது (இதை நாம் விரிவாக குடும்பத்தின் தோற்றத்தில் காணலாம்) இங்குதான் தனிக்குலங்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு இனக்குழுவாக செயல்பட ஆரம்பித்தது. இன்னும் முன்னேறிய சமுதாயத்தில் வணிக உறவும் (நாம் நினைப்பது போன்ற வணிக உறவு அல்ல, இது பொருள்கள் தேவைக்கு தகுந்தார் போல் பரிமாறிக் கொள்ளும் ஒரு உறவாகும்), திருமண உறவும் இருந்தது. இப்பொழுது இரு சமுதாயத்தின் உறவு இன்னும் நெருக்கமாக போர்ஒத்துழைப்பு, ஒரு தலைமையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பண்பு மாற்றம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் பொருள் உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளே. இந்த இனக்குழு போரில் புரு மற்றும் மேல்மத்ரர்களின் வெற்றி என்பது அவர்களிடம் இருந்த போர் குணமும் ஒழுங்கும் மட்டும் காரணம் அல்ல. இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. வென்றால் ஒரு நல்ல சமுதாயம் என்ற சூழ்நிலைதான் வேட்கையாகவும் புரட்சியாகவும் உருவானது. 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு

மூன்றாவது விதியான நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்பது. போரின் பிறகு அந்த சமுதாய சூழல் தன் பழைய நிலையை மறுத்து செய்த புரட்சியின் காரணமாக ஒரு ஆளுமையின் கீழ் போர் புரிந்தது. இந்த நிலையையும் அது மறுத்து போருக்குப்பின் தலைமை பதவியை நீக்கி ஒரு புதிய சமுதாயமாக அடிமைகளையும் அதன் முதலாளிகளையும் விடுவித்தது.குலங்களை அது மறுக்கவில்லை. தலைமை பதவியை இந்திரன் என்றும் அவனின் வீர தீர செயல்களை நாட்டுப்புறப் பாடல்களாகவும் உருவாக்கி வரலாற்றில் இந்த நிகழ்வை ஒரு தேவனின் செயலாக எண்ணி சிலாகித்தனர். ஒரு மனிதன் தன் போர் திறமையின் காரணமாகவும் ஆளுமையின் காரணமாகவும் தெய்வமாக தோற்றுவிக்கப்பட்டான். வருடம் தோறும் அவனுக்கு வேள்வியில் அவி கொடுக்கப்பட்டது. இனக்குழுவின் மனதில் நீங்கா நிகழ்வாய் நாடோடி பாடல்கள் மூலம் இந்திரன் உயிர் வாழ்ந்தான்.

இப்படி ஒரு புதிய சமுதாயம் பழைய இனக்குழுவின் ஒரு சில கூறுகளை எடுத்துக்கொண்டு மற்ற சில கூறுகளை மறுத்து ஒரு புதிய நிலையை தேடிக்கொண்டது. இந்த மாற்றமும் நிலையானது அல்ல, மீண்டும் இயக்கவியலின் சக்கரம் சுழலும் ஆனால் சுழலும் சக்கரம் அதே சக்கரம் அல்ல. ஆரம்ப நிலையில் அந்த சக்கரம் என்றுமே வர முடியாது. மாறும் இவ்வுலகம் ஒவ்வொரு நொடியும் வளர்ந்தும் மாறியும் வருகிறது இதற்கு தொடக்கமோ முற்றுப்புள்ளி கிடையாது அது தேவையும் இல்லை. 

இந்த இயக்கத்திற்கு காரணமாக இருந்த மூன்று விதிகள் இயற்கை, சமுதாயம், மற்றும் சிந்தனை ஆகிய மூன்றிற்கும் பொதுவானதாகவே உள்ளது. பொருள் உற்பத்தியும் அதன் உறவுகளும், இயற்கை, சமுதாயம் மற்றும் சிந்தனையின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றும் அதன் படிநிலைகளை உருவாக்குகிறது. ஒரு சமுதாயமே தனி மனித சிந்தனைக்கும் அதன் மாற்றத்திற்கும் வித்தாகிறது. ஒரு தனி மனிதனின் சிந்தனையினால் வேறு ஒரு பொருள் உற்பத்தியோ அதன் உறவோ இல்லாமல் சமுதாயத்திற்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. மனதுக்குப் புறத்தே இருக்கும் பொருளை மனதின் உள் இருக்கும் சிந்தனையால் மட்டும் எந்த வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. கண்ணை மூடி செய்யும் சிந்தனையால் கற்பனையான உலகில் உலவுவதால் மனதின் புறத்தே உள்ள எந்த ஒரு பொருளையோ, இயற்கையையோ அல்லது சமுதாயத்தையோ சிந்தனையைக் கொண்டு மட்டும் மாற்ற முடியாது. புறத்திலிருந்து அகத்தாக்கம் அடைகிறதே தவிர, அகத்தில் இருந்து புறத்தின் மீது எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. மனிதனின் உழைப்பும் கூட்டு முயற்சியுமே சமுதாயதில் மனிதனின், சமுதாயத்தின் மாற்றம் என்றாலும் தனிமனிதரின் சிந்தனை எண்ணங்கள் உழைப்பாகவோ கூட்டு முயற்சியாகவோ மாறாதவரை அது சமுதாயத்தின் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தொடக்க காலத்தில் மனிதனுக்கு பசியை என்ற ஒன்று ஏற்படாமல் இருந்திருந்தால் உணவு தேவை இல்லாமல் இருந்திருக்கும். இயற்கையின் சவால்களை எதிர்கொள்ள தனிமனிதனாகவே அவன் இருந்திருந்தால் மனித குலம் என்றோ அழிந்திருக்கும். உழைப்பும் கூட்டு முயற்சியுமே ஒரு மனிதனை இயற்கையிடமிருந்து காப்பாற்றுமே தவிர தனிமனிதனாக வனங்களில் இருந்து உணவின் தேவையில்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியும் என்பது கற்பதையே தவிர வேறொன்றும் இல்லை. 

மக்களின் நம்பிக்கை: 

வெளி உலகத்தொடர்பு இல்லாத ஒரு இனக்குழு மக்கள் தூர தேசங்களில் உள்ள யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளை பற்றிய  நிறைய செவி வழி கதைகளை வைத்திருக்கிறார்கள். கடல் பற்றிய எந்த அறிவும் இவர்களிடம் இல்லாதது ஒரு பெரிய அதிசயம் இல்லை. அவர்கள் அதைக் கண்டதும் இல்லை வால்காவிலிருந்து அவர்களின் பயணம் கசகஸ்தானுக்கு எவ்வாறு அமைந்தது என்று தெரியவில்லை. புல்வெளிகளில் கால்நடை வளர்ப்பாக பத்து முதல் 15 தலைமுறைகளை செலவிட்ட அவர்கள், படிப்படியாக கசகஸ்தானுக்கு பின் தஜ்ஜிகிஸ்தான் வழியாக பாமீர் இந்துகுஷ் மலைகளைத் தாண்டி சுவாத நதிக்கரையை (இன்றைய  பாகிஸ்தானை) அடைந்தனர். இங்கிருந்து தெற்கு நோக்கிய சிலரது பயணம் அவர்களுக்கு அரபிக் கடல் பற்றிய அறிவை கொடுத்திருக்கலாம். இக்கால இனக்குழுவில் சிலர் மாற்றத்தை விரும்பாமல் இருந்தது தெளிவாகத் தெரிகிறது இவர்களின் விருப்பு மற்றும் வெறுப்புகளுக்காக மாற்றங்கள் தடைபட போவதில்லை. ஆனாலும் இந்த நிலையான வாழ்க்கை மாற்றங்களை எதிர்த்தல், பழமையை நோக்கி செலுத்துதல். பழமையைப் பற்றிய பெருமை. இவற்றில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. பழைய காலம் இனிமையானது என்பது ஒரு கற்பனையே. அது எதார்த்தத்தின் நிகழ முடியாதது, இந்த அனுமானங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை. ஹெராகிளிடஸ் கூறியது போல நம்மால் ஒரு நதியில் ஒரு முறை வைத்த காலை மீண்டும் அங்கேயே அதே நதியிலேயே வைக்க முடியாது. மக்களின் பழமைவாதமும் முந்தைய காலத்து அழகான வாழ்க்கை என்பது திரும்ப கிடைக்காத ஒன்று. பழைய காலத்து வாழ்வின் சில எச்சங்கள் நாம் தொடரலாம் ஆனால் நம்மால் மீண்டும் அதையே கொண்டுவருதல் முடியாத மற்றும் இயலாத காரியம் ஆகும். நம்மால் மட்டுமல்ல இயற்கையாலும் அது முடியாத காரியம். நிலத்தை செம்பு ஆயுதம் கொண்டு உழுதல், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், அடிமைகளை கொண்டு தொழில், மற்றும் பொருள் உற்பத்தி செய்தல் போன்றவை தவறாகவும் தீமை செயலாகவும் கருதப்பட்டது. இயக்கவியலின் கருத்துப்படி மாற்றம் என்பது மாறாதது என்றாலும், அந்த மாற்றம் நல்லதா? தீயதா? என்று உறுதிப்பட கூற இயலாது. ஏன்! நன்மையும் தீமையும் மனிதனுக்கு மனிதன் சமுதாயத்திற்கு சமுதாயம் மாறுபடும். ஒருவனின் தேவை என்பது அத்தேவைக்காக அவன் செய்யும் செயலை நன்மையாக கருத வைக்கிறது. பிளேட்டோவின் காலத்தில் அடிமை முறையில் இருந்தது அதை அவர் ஆதரிக்கிறார். ஆரியபட்டர் கணித கிரந்தங்களில் அடிமைப் பெண்களை (வது) வைத்து கணித எடுத்துக்காட்டுகளை விளக்குகிறார். இதனால் அடிமைச் சமுதாயம் என்பது சரியானது என்று கூற முடியாது. இயக்கவியல் சரி தவறு என்ற கோணத்தை விடுத்து தவிர்க்க முடியாதது என்றே கூறுகிறது. 

தர்மம் என்ற சொல் பிடித்து நிறுத்துவது என்ற பொருள்படுகிறது. மாற்றத்தை ஏற்காத தத்துவங்களே தர்மமாக பிடித்து நிறுத்துவதில் முனைகிறது. நிலையான ஒன்றை கூறும் தத்துவங்களும் மாற்றத்தை ஏற்காத சிந்தனைகளும் மதங்களின் "மாறாத"  "அழியாத" என்ற சொல்லாடல்கள் உள்ளதை நாம் காண்கிறோம்.ஆனால் அவர்கள் காலத்திற்கு ஏற்ப மாறுவதையும் நம்மால் நிதர்சனமாக காண முடிகிறது. காலத்தால் மாறாத வேதங்கள் பல சாகைகளாக பிரிந்து போனதும் மாற்றமே. இதைத்தானே இயக்கவியலும் உறுதிப்படுத்தியது. மாற்றத்தை விரும்பாத மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் ஏமாற்றத்தையே சந்திக்கிறான். மாற்றத்தை தன்னலனுக்காக இயற்கையை எதிர்த்து கொண்டு வர மனிதனால் முடியும். ஆனால் மாற்றம் நிகழாமல் நிறுத்தி வைக்க முடியாது, இயற்கையாலும் முடியாது. அப்படி நிகழ முரண்பாடுகளே இல்லாத ஒரு சூழல் நிலவ வேண்டும்.தற்போதைய சூழலில் மாற்றம் என்ற விதியை சிறிது தாமதிக்க அல்லது மடைமாற்றம் செய்ய, மதம் மற்றும் கடவுள் என்ற மாபெரும் ஆயுதம் அல்லது வலிநிவாரணி கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலி நிவாரணியால் அளவு மாற்றம் தரும் பண்பு மாற்றம் என்ற வீதியில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் பண்பு மாற்றம் நிகழாமல் முழுமையாக நிறுத்த முடியாது. மக்களின் பண்பு மாற்றத்திற்க்கான எல்லை வரையறை (threshold) சிறிது அதிகப்படுத்துவதால் இது நடக்கலாம். மக்களின் முற்பிறவியில் செய்த பாவங்கள் பற்றிய நம்பிக்கையும், புண்ணியவான் தனவாழ்க்கையை வாழ்வது, பாவிகள் துயரம் அனுபவிப்பது கருமத்தினால் என்றும் இதை போக்க பலவித உபாயங்கள், பல மார்க்கங்கள் காட்டப்படுகின்றன. இந்த நம்பிக்கையே புரட்சி அல்லது பண்பு மாற்றத்தில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்துகிறது. வெள்ளத்தில் குறுக்கே கிடக்கும் மரத்துண்டு தடையை ஏற்படுத்தலாம் ஆனால் அதுவும் சில மாற்றங்களை சந்திக்கும் பின் தடையானது விலகவும் செய்யும். மரத்துண்டும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகும். கடவுளும் மதங்களும் சடங்குகளும் எப்பொழுதெல்லாம் மாபெரும் தடையை உருவாக்கியதோ அப்பொழுதெல்லாம் அது பெரும் மாற்றத்தை சந்தித்தது அதுவும் மாறியது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.


Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

  வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும் , தத்துவங்களும் , வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்ட...