Skip to main content

குடும்பத்தின் தோற்றம்

மனைவிக்கு கடிதம் – குடும்பத்தின் தோற்றம்

உன்மேல் உள்ள அளவு கடந்த அன்பினால் வரையும் மடல் இது. கணவன் மனைவியாக 16 ஆண்டு காலம் கழித்த இனிமை ததும்பும் நம் வாழ்வில் சில கசப்பான மோதல்களும் சச்சரவுகளும் உள்ளதை நம்மால் மறுக்கவே முடியாது. இந்த முரண்பாடுகள் தான் நம்மையும் நம் குடும்பத்தையும் இயக்கி வருகின்றன. சுகமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கை, இதுதான் விதிஎன்று எண்ணி கடந்து செல்ல நாம் சாதாரண கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் அல்ல. நித்தம் மாறும் இவ்வுலகில் நடைமுறையை ஒன்றாக எதிர் நோக்கிய நம் பயணத்தில், வாழ்க்கையை எதார்த்தமாக அணுக நாம் நம்மை பழகிக் கொள்ள முயற்சித்தோம். ஆ! இது சாதாரண காரியமா? இது ஒரு மாபெரும் மாற்றம் என்று எனக்கு உணர்த்தியது. உன்னுள் நடக்கும் கருத்துமோதல், உன் எண்ணத்தை அலைபாய செய்வதை நான் பலமுறை கண்டதுண்டு. வாழ்க்கையை நடைமுறை நிகழ்வாக எண்ணிப் பார்ப்பது என்பதும், பல பழைய விதிகளை தூக்கி எறிவது என்பதும் நாம் தொடங்கிய தாண்டுதலின் ஆரம்ப கட்டம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் காரணம் என்று கூறப்படுவது நடைமுறையில் ஆராய்ந்தால் அது கற்பிக்கப்பட்ட காரணமாகவே உள்ளது. நம் தலைவிதி, நாம் செய்த பாவம், முற்பிறவி வினை, தெய்வச்செயல், கோள்களின் இருப்பும் அதன் விளைவும் என்று பலராலும் நமக்கு கூறப்பட்ட காரணங்கள் காரியங்களை தீர்மானிப்பதாக எண்ணினோம். தெய்வபலம் வேண்டி பல இடர் கடந்தும் நாம் பல நேரங்களில் இதனைப்பற்றிய உரையாடல்களையும் மேற்கொண்டோம். சில இடங்களில் ஒருமித்த குரலாய் சில இடங்களில் கருத்து வேறுபாடுகளையும் கொண்டோம். ஆயினும் நாம் கொண்ட கொள்கை என்பது நமக்கு பல தெளிவுகளை கண்டிப்பாக கொடுக்கும். அதனை உனக்கு விளக்க வேண்டிய இக்கடிதம்.

நாம் காணும் இக்குடும்பவடிவம் என்பது பல படிநிலைகளைத்தாண்டி இன்று நம்முடன் இருப்பது. விலங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு உன்னுள் ஏட்டளவில் மட்டும் இருந்தால் அதை திருத்திக்கொள்,  ஏனெனில் அதுதான் நிதர்சனம் மிக மக எதார்த்தமான உண்மை.இது இயற்கையின் தேர்வு என்பதை அறிய வேண்டும். எண்ணமோ மனமோ கருத்தோ இவ்வுலகையும் மனிதனையும் படைத்திருந்தால் மனிதன் படிநிலை வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக போயிருக்கும். மனிதன் இவ்வுலகில் தோன்றிய படிநிலை வரலாற்றை இன்றளவும் ஒவ்வொரு தாயின் கருவில் தோன்றும் ஒரு செல் உயிரினத்திலிருந்து அதன் மாற்றம் எவ்வாறு உள்ளது என்பதை, கண்கூடாக இருமுறை பார்த்த பின்னரும் நாம் மறுக்க முடியாது. இந்த வளர்ச்சிக்கும் அதன் உள்ளே உள்ள முரண்பாடுகளே காரணம். இதனால் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் முரண்பாடுகள் இன்றியமையாதவை. நான் கற்ற நூல்களிலும் தத்துவங்களிலும் என்னால் மறக்கவே முடியாத ஒன்று, உன்னிடம் நான் பலமுறை உரையாடிய இயக்கவியல் விதிகள் தான். இதன் மூலம் நாம் நம்மை சுற்றி உள்ள இப்பொருள் உலகம், நம் சமுதாயம் மற்றும் நம் சிந்தனை ஆகியவற்றின் படிநிலை வளர்ச்சியையும் எதார்த்த கண்ணோட்டத்தில் மிகச்சுலபமாக கண்ணை மூடாமல் மனதை ஒருநிலைப்படுத்தும் சிரமம் இல்லாமல் புலன்களை அடக்காமல் அறிந்து கொள்ள முடியும். இதற்கு ஆகச் சிறந்த தத்துவ மேதைகளான மார்க்ஸ் மற்றும் எங்கஸின் பல கட்டுரைகளும் படைப்புகளும் இருந்தாலும் உன்மேல் நான் கொண்ட அன்பினால் உனக்கு கூற விரும்புகிறேன். இதை நீ அறியும் போது நீ போதிமரம் இல்லாத புத்தனைவிட, யோகங்களை கடந்த மகாவீரரை விட மிக எளிதில் நிதர்சனம் எது என்பதையும் இயற்கையின் தேர்வு என்பதை அறிவாய்.

மனித சமுதாயத்தோற்றம்

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம்? என்ன செய்கிறோம்? எங்கு செல்ல போகிறோம்? இதைத்தாண்டி பலஞானிகள் இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது, எவ்வாறு நிலைக்கிறது, எவ்விதம் முடியும் என்பதை விளக்கியுள்ளனர். என்னால் முடிந்தவரை இவை அனைத்தையும் எளிமையான குறுகிய வடிவில் உனக்கு நான் விளக்க விரும்புகிறேன். இங்கு நான் கூறும் கருத்துக்கள் எல்லாம் மேல் கூறிய அறிஞர்களின் அளவற்ற ஆராய்ச்சியின் முடிவுகள், அதை ஒரு நல்முத்தின் வடிவமாய் சுருக்கிஉனக்கு கொடுக்க விரும்புகிறேன்.

மனிதன் உழைப்பு என்ற ஒன்றினால் மட்டுமே விலங்கிலிருந்து வேறுபடுகிறான். இதன் மூலம் உழைப்பு என்பது மனிதனுக்கு எவ்வளவு தேவையானது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். மனிதனின் குடும்பம் மற்றும் வாழ்க்கையை நிலையை பெரிய அளவில் மூன்றாகப் பிரிக்கலாம். 1.காட்டுமிராண்டி நிலை. 2.அநாகரீக நிலை 3.நாகரீக நிலை.

தாய்வழிச்சமுதாயம்

கற்கால மனிதன் மரத்தின் மேல் இலை பழம் கிழங்கு இவற்றை உண்டு வாழ்ந்து வந்தான். நிலத்தில் வாழ முயற்சிக்கும் பொழுது இயற்கையை அவன் எதிர்த்து வாழ வேண்டி வந்தது. நினைவில் கொள் மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியும் அவன் இயற்கையை எதிர்த்தோ அல்லது அதன் சக்தியை தனக்கு சாதகமாக்கியதால்தான் சாத்தியமாயிற்று. காட்டு விலங்குகள் மழை குளிர்  போன்ற ஆபத்துகளை அவன் எதிர் நோக்க வேண்டி இருந்தது. இதில் அவன் கூட்டாக வாழ்வதின் அவசியத்தை உணர்ந்தான். இதுதான் முதல் சமுதாயமாகும். அங்கு உயிர்பிழைப்பது ஒன்றே லட்சியம். உரிமை என்றோ கடமை என்றோ வித்தியாசம் இல்லை. சமுதாயம் வளர குழந்தைப்பிறப்பும் பெண்ணும் எவ்வளவு முக்கியம் என்பதை சமுதாயம் நன்கு உணர்ந்திருந்தது. ஆம்! நான் கூறுவது முற்றிலும் உண்மை. இந்தச் சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் ஒன்றாக இருந்தது. இந்த தலைமை தாய் ஆவாள். அந்த சமுதாயத்தின் முழு உண்மையாக யார் தன்னைப்பெற்ற தாய் என்பது தெரியும். தந்தை யார் என்ற கேள்வி எழ அங்கு வாய்ப்பில்லை. இன்று நாம் காணும் குடும்பவடிவை கொண்டோ விதிகளைக்கொண்டோ இதை நோக்கினால் அது அருவருப்பாக தான் தோன்றும். என் இனியவளே மணம் வீசும் பூவின் நிலைவேறு அந்தச் செடியின் வேர் பகுதி என்பது வேறு, பூவின் மணத்தை வேரில் எதிர்பார்க்காதே. இச்சமுதாயத்தில் வேட்டையாடுதல், உணவை பொதுவாக சமமாக பகிர்ந்தல் போன்ற எல்லாவற்றையும் தலைமை தாங்கி செல்பவள் தாய் தான். தமிழ் தொல்நூல்களில் பால்வரைதெய்வம் என்று அழைக்கப்பட்டவளும் இவளே. இங்குள்ள எல்லா ஆண்களும் அவள் குழந்தைகளே அதனாலேயே அவர்கள் அவளின் கணவர்களும் ஆவர். இந்த ரத்த உறவு முறையை கொண்ட இந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக, தாய்வழிகுடும்பமாக இருந்தனர்.

திருமணஉறவுகள்

மக்கள் கூட்டம் அதிகரிக்க உணவின் தேவையும் அதிகரித்தது. இதனால் இவர்கள் இடம் பெயர்வதும் பல குடும்பமாக பிரிவதும் இயற்கையே. இப்படி உருவான ஒவ்வொரு குடும்பமும் தன் தேவைகளை வேட்டையாடுதல் மூலமாக தீர்த்துக் கொள்ளும். ஒரு ஒருமித்த குழுவில் பல குடும்பங்கள் அல்லது தாய்வழிக்குலங்கள் கொண்ட சமுதாயமாக இது இருந்தது. இயக்கவியலின் முதல் விதியான முரண்பாடுகளின் இணைப்பு என்பது, ஒரு குடும்பத்தின் வளர்ச்சியும் சமுதாயத்தின் வளர்ச்சியும் முரண்பாடு கொண்டதாகவே இருந்தது. உதாரணமாக விலங்குகளில் எங்கு குடும்பம் நெருக்கமாக பிணைக்கப்படுகிறதோ அங்கு மந்தை என்பது அபூர்வமான ஒன்றாகிறது. சமுதாயம் பலப்பட குடும்ப உணர்வுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற தேவை அங்கு இருந்தது. இதுதான் முதல் முரண்பாடு. குடும்பத்தின் கூட்டு உணர்ச்சி குழுவின் அல்லது சமுதாயத்தின் கூட்டு உணர்ச்சிக்கு எதிரியாய் இருந்தது. இந்த ஆரம்ப கால உறவுவடிவில் வந்த அடுத்த படிநிலை வளர்ச்சி தான் தலைமுறை தாண்டிய உறவுஎன்பது, அது விலக்கப்பட்டது. அதாவது முதல் தலைமுறை அடுத்த தலைமுறை திருமண உறவு கொள்ளுதல் தடை செய்யப்பட்டது. இங்கு சகோதர சகோதரிகளே உறவுகள் இருந்தன. ஒருவர் உடலில் இருவராக பிரிந்து வந்த மனுவும் சதரூபாவும் சிருஷ்டியை உருவாக்கியதாக பாகவத புராணம் கூறுகிறது. இப்படித்தான் பிருது-அர்சிஸ் போன்ற எத்தனையோ உதாரணங்கள் கூறலாம். இதிலிருந்து அடுத்த படிநிலை வளர்ச்சியாக சகோதர-சகோதரிகளின் உறவும் விலக்கப்பட்டது.ரிக் வேதத்தில் யமன்-யமி உரையாடல் சகோதர சகோதரிகளின் உறவை விலக்கியதைப்பற்றி கூறுகிறது. இங்குதான் குழுமணங்கள் தோன்றின. ஒரு குலத்தின் ஆண்கள் வேறு குலத்தில் பெண்களை குழு மணமாக செய்து கொண்டனர். இது ஆண்களின் சகோதரியும் பெண்களின் சகோதரரும் விலக்கப்பட்டனர். மகாபாரதத்தில் திரௌபதியின் வரலாறு இதன் மிகச்சிறந்த உதாரணமாக. இந்தக்குழுமணத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்களும், ஒரு ஆணுக்கு பல மனைவிகளும் உண்டு. இங்கு போட்டி பொறாமை என்பது இல்லை. இங்கு பிறக்கும் குழந்தைகள் தாய்வழிகுலங்களாகவே கருதப்பட்டன.

என் இனியவளே பெண்சக்தி என்னவென்று சொல்கிறேன் கேள். பெண்கள் பிரிவு வீட்டில் ஆட்சி புரிந்தது. ஆண்கள் வேறுகுலங்களிலிருந்து வந்த கணவர்கள் ஆவர். அனைத்து பொருளும் பொதுவில் இருந்தது அதன் நிர்வாகம் பெண்களே, தன் பங்கு பொருள் கொண்டு வராத ஆண்கள் துரதிஷ்டசாலிகளே! பெண்கள் எந்த வினாடியும் அவனை வீட்டிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட முடியும். அப்படி உத்தரவிட்ட பின் அவன் தன் குலத்துக்கோ அல்லது வேறு குலத்தில் சென்று மணம் செய்து தன் வாழ்க்கையே துவங்குவான். இங்கு பெண்கள் அனைவரும் ஒரே குலத்தைச்சேர்ந்தவர்கள் பெண்கள் கை மேலோங்கி இருக்க காரணம் இதுவே. இந்நிலையில் பெண்களின் எண்ணம் குலத்தின் முன்னேற்றமாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்நிலையில் இருந்த சமுதாயம் பல குழுக்களில் உள்ள திருமணத்தடையின் காரணமாக குழுமணம் ஒரு முடிவுக்கு வர, அது இணைமணம் என்ற படிநிலைக்கு வந்தது. இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமானால் காலப்போக்கில் உறவு முறைகள் படிநிலை வளர்ச்சி கண்ட பின் பல உறவுகள் திருமணத்திலிருந்து விலக்கப்பட்டன. மேலும் குலங்களின் திருமண விதியை பின்பற்றாதவர்கள் விலக்கப்பட்டார்கள். இதனால் மிகவும் சிக்கலான பலவரைமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்ட குலங்களுக்கு இடையே குழுவாக மணம் புரிதல் இயலாமல் போனது. திருமணம் என்ற எல்லை சுருங்கத்தொடங்கியது. இதன் விளைவாக ஒரு பெண் பல கணவர்களையோ ஒரு ஆண் பல மனைவிகளையோ மனம் செய்யும் வாய்ப்பு குலங்களுக்கு இடையில் இல்லாமல் போனது. மணவிதியை மீறியவர்கள் சமூகத்திலிருந்து விலைக்கு வைக்கப்பட்டதால் மணவாய்ப்பு கிடைக்காமல், பெண்கள் கடத்தப்பட்டனர் இதுதான் முதல் முதலில் வரலாற்றில் தோன்றிய பெண் களவு. இது வரும் காலங்களில் பல வண்ணம் தீட்டப்பட்டு களவுமணம் என்றும் காந்தர்வமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்தில் ஏற்பட்ட இந்த மாபெரும் படிநிலை வளர்ச்சி குழுமணத்தில் இருந்து இணைமணமாக ஆனது. அதாவது ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்தல் இது பெரும்பாலும் குழு உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டவை. இந்த இணைமணம் மணரத்துக்கு உட்பட்டது. கருத்து வேறுபாடுகள் உள்ள ஆணோ பெண்ணோ மணத்தை ரத்து செய்யலாம். இவர்கள் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ளலாம்.குழந்தைகள் தாயைச் சேர்ந்தவர்கள்..

என் இனியவளே இதுவரை நாம் கண்ட எல்லா சமூகங்களும் தாய்வழி இரத்தஉறவும், பொதுவுடமை சமுதாயமாக இருந்தது ஆனால் இந்த திருமண உறவுகளின் வரைமுறையால் 1.ரத்த உறவு குடும்பம் 2. பூனலுவா குடும்பம் (குழுமணம்) 3. இணை குடும்பம் என்று சுருங்கியது.இவையெல்லாம் பெண்களின் தலைமையில் இருந்த குழு மற்றும் குலங்களின் முடிவுகளா? வேட்டையாடும் குலங்கள் எப்பொழுது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்ய தொடங்கியதோ, அப்பொழுது ஏற்பட்ட மாபெரும் மாற்றம் தாயுரிமை என்ற மாபெரும் ஆலமரத்தை வேரோடு பிடுங்கிப்போட்டது. விவசாயத்தின் உற்பத்தி சாதனங்களும் கால்நடைகளும் பெரும்பாலும் ஆண்களிடம் இருந்தது. திருமணம் ரத்தானபோது இந்த உற்பத்தி சாதனங்கள் கால்நடைகளும் ஆண்கள் தங்கள் பிறந்த குலங்களுக்கு கொண்டு சென்றனர். பிள்ளைகள் தாயிடமே இருந்தனர். இந்த உடைமை கொள்ளலில் தந்தையின் உடைமைகள் அவனுக்கு பின் அவன் பிள்ளைகளை சாராமல், அவனுடைய சகோதரர் சகோதரிகளின் குழந்தைகளிடம் போய் சேர்ந்தது. இறந்தவன் குழந்தைகளுக்கு வாரிசு உரிமை கிடையாது. இது கேரளாவில் மருமக்கத்தாயம் என்ற சொல்லாடலோடு நிலவி வந்த சொத்துரிமை வழியாகும்.

இப்படிச் செல்வம் பெருகிய போது பெண்ணைவிட ஆணுக்கு அந்தஸ்து உயர்ந்தது மேலும் தந்தைக்குப் பின் தன் சொத்தை தன் பிள்ளைகள் அனுபவிக்க வாரிசு உரிமை முறையை மாற்ற ஆணுக்கு இது ஒரு தூண்டுகோலாக அமைந்தது. இதன் விளைவாக தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. தாய்வழி மரபுகள் மாற்றப்பட்டன வரலாற்றில் நடந்த மாபெரும் புரட்சியாக இது இருந்தது தவிர்க்க முடியாத நிகழ்வாகவும் இருந்தது. பெண்ணினம் உலக வரலாற்றில் கண்ட தோல்வி, பெண்கள் இழிநிலைக்கு தள்ளப்பட்டார்கள், அடிமைப்படுத்தப்பட்டார்கள் ஆணின் உடல் வேட்கையில் சிக்கி குழந்தை பெறுகின்ற சாதனமானார்கள். சிறிது பின்னோக்கிச்சென்று இந்த மாபெரும் நிகழ்வின் சாத்தியங்கள் எவ்வாறு நிகழ்ந்தது என்று மீண்டும் ஒருமுறை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இது ஆன்மீக உலகில் உள்ள காரணம் கற்பிக்கும் முறை அல்ல, விஞ்ஞான ரீதியில் காரணத்தை கண்டறியும் முறை.குழுமணநிலையிலிருந்து ஒருதாரமணம் என்ற மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் பெண்களே என்று ஆதி சமூகத்தை ஆராய்ந்த பாஹொ ஃபென் கூறுகிறார் . இதை ஏங்கெல்ஸ் ஆமோதிக்கிறார். இதன் காரணம் பொருளாதார நிலைமையின் வளர்ச்சி பொதுஉடைமையின் பலவீனம் மக்கள் தொகை பெருக்கம் இதன் விளைவாக பாலியல் உறவுகளில் முன்னிருந்த வெகுளித்தன்மை, ஒரு தரக்குறைவான உறவாக பெண்களுக்கு தோன்றி இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஆண்களிடமிருந்து வந்திருக்க முடியாது அவர்கள் குழுமணத்தின் இன்பங்களை விட ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். (மேலும் குழுமணத்திலிருந்து இணைமணம் முறைக்கு மாறியது பண்டைய கால கட்டளைகளை மீறியதாகும் இதற்காக ஒரு பெண் கற்புரிமையை பெற தவமாக சில விதிமுறைக்கு உட்பட்டு ஒப்படைப்பை செய்ய வேண்டும்.இந்த சடங்கை பல மதங்களில் நாம் காணலாம் ஒரு கணவனை அடையச் செய்யும் தவம் என்ற மேலோட்டமான கதைகளாகவே இவை இருக்கின்றன. ஆனால் அக்காலத்தில் ஒருவனை மட்டும் கணவனாக அடைய அவர்கள் குறிப்பிட்ட வரைமுறையில் தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். பாபிலோனியா பெண்கள் மிலிட்டா ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஒப்படைப்பைச்செய்தனர். மத்திய கிழக்கில் பெண்கள் அனெய்டிஸ் தேவதையின் முன் தாங்கள் விரும்பிய ஆணுடன் சுதந்திரக்காதல் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் திருமணம் செய்ய தகுதி உற்றவர்களானார்கள். இந்தச் செய்தி முகம்சுளிக்கும் வண்ணமாக அல்லது நம்பத்தகாத செய்தியாக இருக்கலாம். ஆனால் இதன் மீட்சி அரசர்கள் மற்றும் நில பிரபுக்கள் ஆட்சி வரை மீண்டும் வந்ததுதான் உண்மை. ஒரு சில சடங்குகள் பலவகையாக மாறி அதனை எச்சங்கள் நீண்ட நெடுநாள் வரை தொடரவே செய்கிறது. "முதல் இரவு உரிமை" என்ற வழக்கம் நிலப்பரப்புகள் காலம் வரை இருந்ததோ ஒரு கசப்பான உண்மையே)

இந்தியாவில் சில பகுதிகள் திபெத்தில் பல கணவர்மணம் இருந்தது. இன்றளவும் நாம் செய்திகளில் பார்க்கிறோம் பல ஆதிவாசி குடும்பங்களில் பல கணவன் முறை உள்ளது சகோதரர்கள் ஒரு பொது மனைவியை கொள்வது. இது குழுமணத்தின் ஒரு நீட்சியாக உள்ளது. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் ஐந்து கணவர்கள் சகோதரர்களே. கேரளாவில் ஒரு தனித்தன்மையான கிளப் மணம் நாயர் சமூகத்தில் இருந்தது. இங்கு சில ஆண்கள் ஒரு பொது மனைவியை கொண்டனர். இதுபோல பல குழுக்கள் இருந்தது ஆண் பல குழுக்களில் இடம்பெற்றான். இதனால் இது பலதார பல கணவர் மணமாக இருந்தது. இதன் தன்மை என்னவென்றால் இங்கு உறுதியாக தாய் யாரென்று தெரியும் அதனால் இது தாய் வழி சமுதாயமாக இருந்தது. குலத்தின் பெயருக்கு பதிலாக இல்லத்தின் பெயர் தலைமுறைக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது. சொத்துரிமை மற்றும் மணமுறை ஆகியவற்றில் கேரளம் சிலகாலம் முன்புவரை ஆதிச்சமுதாயத்தின் தன்மைகளை கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

 

தந்தைவழிச்சமுதாயம்

தாயுரிமை தூக்கி எறியப்பட்டு தந்தைவழி சமுதாயம் தோன்றிய ஆரம்ப காலங்களிலும் பொதுவுடமை என்பது குடும்பத்தில் முழுவதுமாக மறைந்துவிடவில்லை. அதேபோல் அடிமைமுறை என்பது தோன்றி நன்றாக வளர்ந்து விட்டிருந்தது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற குடும்பமயமான பல கருத்துக்கள் நிலவும் நேரத்தில் உண்மையான குடும்பத்தின் தோற்றத்தை உன் முன்னே வைக்கிறேன் அதிர்ச்சியடையாதே.

இனியவளே இந்த உண்மையை. சுதந்திரமானவர்களையும் சுதந்திரமில்லாதவர்களையும் கொண்ட தந்தை அதிகாரத்தின்கீழ் உள்ளதுதான் குடும்பம் என்பது. இந்த வகை குடும்பத்தின் தலைசிறந்த மாதிரி ரோமானிய குடும்பம் (familia) என்ற சொல் உணர்ச்சி பசப்பும் குடும்ப சச்சரவும் சேர்ந்த கலவையான ஒன்றைக்குறிக்கவில்லை. உண்மையில் அது திருமணமானவர்களையோ அவர்களது குழந்தைகளையோ அது குறிப்பிடவில்லை. அது அடிமைகளை மட்டுமே குறித்து. famulus என்றால் வீட்டு அடிமை என்று பொருள் familia என்பது ஒரு நபருக்கு சொந்தமான அடிமைகளின் மொத்த எண்ணிக்கையை குறிக்கும். ரோமானியர்கள் ஒரு புதிய சமுதாய அமைப்பில் தலைவன் தன் கீழ் மனைவியையும் குழந்தைகளையும் சில அடிமைகளிலும் ரோமானிய தந்தை அதிகாரத்திற்குட்பட்டு அவர்களுடைய வாழ்வையும் மரணத்தையும் முடிவு செய்கிற அதிகாரத்தை வைத்திருந்தான்.

படிநிலை வளர்ச்சியில் இதற்கு முன்னால் உள்ள நிலையிலிருந்து அதன் கரு மிகத்துல்லியமாக குறுவடிவில் எளிதில் காணக் கிடைக்காத ஒன்றாக அதன் அடுத்த நிலைக்கு தொடரும். இதை நாம் கவனிக்க தவறினால் அந்தப் படிநிலை வளர்ச்சியின் தொடர்பை அறிய முடியாமல் போகலாம். நான் இதை கூற காரணம் ஒவ்வொரு நிலையிலும் குடும்பம் அதன் மையக் கருவில் உள்ள வர்க்கபேதங்களைக் கொண்டே இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது.

இந்த தந்தைவழிச்சமுதாயம் ஒருதாரம்மணமாக மாறியது. அதன் காரணம் உறுதியான உரிமையுள்ள வாரிசு தேவை. அவன் சொத்தை ஏற்று வழிநடத்த வேண்டும். இதற்கு ஆணின் அதிகாரத்திற்குள் பெண் வைக்கப்படுகிறாள். சொத்துரிமை என்ற ஒரு நோக்கத்திற்காகவே ஒரு தாரமணம் ஏற்பட்டது இந்தச் சமுதாயம் மத்திய ஆசியாவில் செமைட்டுகள் மற்றும் ஆரியர்களின் சமுதாயமாக இருந்தது. கோத்திரம் (தொழுவம்) என்ற வார்த்தையின் அர்த்தமும் தந்தைவழி மேய்த்தல்நாடோடி குடும்பத்தின் வழியாக வந்தது. ‘கோ’ என்றால் மந்தையை குறிக்கும். பசு என்பது பிற்காலம் மாற்றம். கோத்திரத்தின் தலைவனான ஒரு ஆணின் வழியை குறிக்கும். பெண் பெயர் உள்ள கோத்திரம் எங்கும் இல்லை என்பதை நீ நன்றாக அறிவாய். இப்படி உள்ள இந்த சமூகத்தின் தலைமை நிர்வாகியாக ஒரு ஆண் இருக்கிறான். அவன் கீழ் அந்த சந்ததியை சேர்ந்த தலைமுறையினர் குடும்பமாக வாழ்கின்றனர். நிலம் பொதுவாக வைக்கப்படும், உற்பத்தியான உணவுபொருள்கள் பொதுவாக வைக்கப்பட்டு விநியோகிக்கப்படும். இங்கு குடும்ப கவுன்சில் என்பது மிக முக்கியமானது, ஆரம்ப கால ஆட்சி முறை ரஷ்யாவில் ‘ஓப்ஷீனா’  டால் மேஷியாவில் ‘வெர்வ்’ ‘zàdurga’, bratstvo என்ற பெயரில் செர்பியா மற்றும் பல்கேரியாவிலும் இருந்தது. பிரான்சில் ‘perconneries ஆக இருந்தது. ஆரியர்கள் இடையே ரிக் வேதத்தில் கூறியது போல ‘சபா’ மற்றும் ‘சமிதி’ என்ற குடும்ப கவுன்சில் முறை முக்கிய அதிகார முடிவுகளை எடுத்தது. குடும்பத்தின் தலைவனையும் அது தேர்ந்தெடுத்தது. இந்த வீட்டுச்சமூகம் அதனுள் தனிக்குடும்பங்களை கொண்டாலும், குடும்பத்தின் தனித்தன்மை என்ற ஒன்று இருக்காது. அது ஒரு முழு வீட்டுச்சமூகமாக செயல்படும். இந்த தந்தை வழி சமூகத்தின் வேறு சில வடிவங்களையும் இங்கு காண்போம். அது பலதாரமணம் செமைட்டுகள் மத்தியில் இது இருந்தது. அடிமைமுறை தொடங்கியதன் விளைவு பலதாரமணம். செல்வந்தர்கள் நிலப்பிரபுக்கள் பலதாரமணம் செய்து கொண்டனர்.

ஒரு தாரமணம்

என் அன்புக்குரியவளே இப்பொழுது ஒருதாரமணத்தைப்பற்றியும் தனிகுடும்பம் பற்றியும் பார்க்கலாம். நாகரீக நிலையில் உள்ள இந்த ஒரு தாரமணம், அதன் உன்னத தன்மையும் அதன் முரண்பாடுகளையும் irony of fate தன்னகத்தே கொண்டுள்ளது. வற்றாத இந்தக்கடலின் நீர் பெண்ணினத்தின் கண்ணீர் துளிகளை கொண்டது. உன்னதமான காதல் உறவுகளையும் தன்னகத்தே கொண்டது. மறுக்கவோ மறைக்கவோ முடியாத விபச்சாரம் மற்றும் கள்ளஉறவுகளையும் கொண்டது.

ஒரு தாரமணம் இணைமணத்திலிருந்து தோன்றியது ஆணாதிக்க சமுதாயத்தில், தந்தை வழியில் குழந்தைகளை பெறுவும், இயற்கையான வாரிசுகளைக் கொண்டு சொத்தை அனுபவிக்கவும், இந்த ஒரு தாரமணம் ஏற்படுத்தப்பட்டது. இது ஆண்வர்க்கத்தின் தேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்டது. திருமணம் ரத்துசெய்ய முடியாதது இணைமணதில் இருவருக்கும் இருந்த திருமணரத்து சுதந்திரம் இப்பொழுது ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு தாரம்மணம் நடைமுறையில் ஆண்களுக்கு நிகழவில்லை. அது மனைவியின் உன்னத தன்மையையும் கற்பையும் மட்டுமே எதிர்பார்த்தது. ஆண்களின் உறவுமுறை கட்டுப்பாடற்ற சுதந்திரமானதாக இருக்க அது அனுமதித்தது. ஒழுக்கமும் தண்டனையும் பெண்வர்க்கத்தின் பால் மட்டுமே செலுத்தப்பட்டது. அப்படியானால் வரலாற்றில் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்ததா என்ற சந்தேகம் உனக்கு எழலாம் இது மிக நியாயமான சந்தேகமே. கிரேக்க காவியங்களில் உள்ள கதைகள் பெருவாரியான நிலையில் பெண்கள் கீழ் நிலையில் நடத்தப்பட்டது போல சித்திருக்கின்றன. ஹோமரின் ஒடிசி மற்றும் எஸ்கிலஸின் ஓரெஸ்தெயா போன்றவற்றை காவியங்களில், போரில் வெற்றி பெற்ற வீரன் எவ்வாறு பெண்களை அடிமை கொள்கிறான் என்றும், போர் முடிந்து தேசம் திரும்பும் பொழுது அவர்களை வீட்டுக்குள் அழைத்துச்செல்வதுமான கதைகள் உள்ளன. அடிமைகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவில் சொத்தும் வழங்கப்பட்டது. அப்படி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக அடுத்த தலைமுறை பெண்ணடிமை முறையை எதிர்த்திருக்கும். மாறாக அந்த தலைமுறை தன் தாய் அடிமை என்பதை மறந்து, அவன் அதே ஆணாதிக்க செயலைத்தான் செய்தான். அவர்கள் வீரயுகத்தில் பிறந்த வீரர்கள் அவர்களுக்கு சுதந்திரத்தின் அருமை புரியும், அதனால்தான் அவர்கள் பெண்களை அடிமைப்படுத்தினார்கள். அனைத்து இடங்களிலும் களம் இவ்வாறாக இல்லை. ஸ்பார்டாவின் உள்ள தன்மை வேறு மாதிரியானது. ஸ்பார்ட்டாவில் உள்ள சமுதாயம் இணைமணத்தை கொண்டிருந்தது அங்குள்ள பெண்களின் நிலை சுதந்திரமாகவே இருந்தது. மணரத்து செய்ய இருவருக்குமே உரிமை இருந்தது. குழந்தையின்மையால் இரண்டாவது மணம் அரசு தலைமயில் நடத்தப்பட்டது. அங்குள்ள பெண்களின் சுதந்திரம், வேறு ஒரு இடத்தில் அடிமை நிலையை கொண்டிருந்தது, விளைநிலத்துடன் பிணைக்கப்பட்ட ஹாலெட்டுகள் என்ற அடிமை மக்கள் பண்ணையில் வேலை செய்தனர். அவர்கள் ஸ்பார்ட்டாவின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். இந்த பெண்களின் சுதந்திரம் ஹாலெட்டுகளின் அடிமைத்தனத்தினால் உருவானது. ஏதென்ஸில் பெண்ணடிமைக்கு முன்னோடியாக இருந்தனர். பெண்கள் குழுவாக வீட்டின் பின்புறம் உள்ள குடியிருப்பில் இருந்தனர். அவர்கள் எப்பொழுதும் காவலிலேயே வைக்கப்பட்டனர். சில நேரங்களில் வேட்டை நாய்களின் காவலிலும் அவர்கள் இருந்ததண்டு. யூரிபிட்டிசின் கதையில் ‘olkurema என்ற சொல், வீட்டை பராமரிக்கும் ஒரு பொருள் என்று அஃறிணையில் குறிக்கப்பட்டது. என்ன ஒரு சோதனை இந்த பெண்ணினத்திற்கு. சில நேரங்களில் பெண் பாதுகாப்பதற்கு அலிகள் வைக்கப்பட்டனர். பல நேரங்களில் அலிகள் உருவாக்கப்பட்டனர். நம் நாட்டின் முகலாய காலத்தில் அரச பெண்களின் சேவை மட்டும் காவலுக்கு அலிகள் உருவாக்கப்பட்டது, ஆவரணா என்ற நாவலில் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை இஜடா என்று குறிப்பிடுகின்றனர். பெண்களின் கற்பை காக்க கொடுக்கப்பட்ட விலை வரலாற்றில் அநேகம் உள்ளது. இவை அனைத்தும் சொத்துரிமை மற்றும் ஆணாதிக்கம் என்ற மூலக்கொள்கையை கொண்டதாகும்.ஒருதாரமணத்தின் முக்கிய அம்சம் ஆணதிகாரம், பெண்ணின் கற்புடைமை, இயற்கையான தந்தையின் வாரிசு.

ஆரியர்கள் ‘வது’ என்ற சொல்லை பெண் அடிமைகளுக்கு உபயோகித்தனர். காலப்போக்கில் வது என்ற வார்த்தை மணப்பெண்ணானது. ஆரியபட்டரின் கணித எடுத்துக்காட்டுகளில் வது என்ற சொல் அடிமைப்பெண்களை குறிக்கிறது. பெண்களை ‘அபலா’ போன்ற சொற்களால் அழைத்தனர். அபலா என்றால் பலம் இல்லாதவள் என்று பொருள். இந்து சாஸ்திரத்தில் எட்டு வகையான திருமணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், ராக்ஷசம் மற்றும் பைசாசம். இரண்டு பசுக்களை வாங்கிக்கொண்டு பெண்ணை தானம் செய்வது ஆர்ஷவிவாகம். இங்கு பசுவின் மாற்றாக வந்ததாலும் மாட்டுப்பெண் (மாற்றுப்பெண்) என்று அழைக்கப்பட்டாள். இந்திய புராணங்களில் எத்தனை நல்ல உதாரணங்கள் நாம் பார்த்தாலும் அதில் பதிவிரதை ,கற்புடையவளாக பெண் மட்டுமே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.இதுதான் ஒரு தாரமணத்தின் சிறப்பம்சமாகும். ஆனால் கணவனுக்கு கற்பு ஒருதாரமணத்தில் முழுமையாக சமூகத்தில் இல்லாத இருந்தது உண்மையே, அவனுடைய காதல் லீலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.மனைவியை விடுத்து பொதுமகளிருடன் காதல் லீலைகளில் ஈடுபட்டனர். சங்கஇலக்கியங்களில் குறுந்தொகைதயில் உள்ள ‘காதற்பரத்தைகூற்று’ மிகத் தெளிவாக தலைவன் காதல்பரத்தையின் காதல்லீலைகளிலிருந்து இப்பொழுது புதல்வன்தாய் சொல்படி கேட்பதாக கண்ணீர் மிகும்பாடல்கள் உள்ளன. மருதத்திணையில் புதல்வன்தாய் என்ற சொல்லாடலே ஒருதாரமணதில் தலைவன் அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறது. தான் கொண்ட உறவுகளில் புதல்வன் தாயிடம் பிறக்கும் பிள்ளைக்கு சொத்துரிமை இருந்தது. அதனால் அந்த சொல்லாடல் உபயோகப்படுத்தப்பட்டது. இது பட்டமகிசி போலத்தான்.

என் அன்பிற்கினியவளே வரலாற்றில் ஏற்பட்ட முதல் வர்க்கபிரிவினையாக ஒடுக்கப்பட்ட பெண்ணும், அதிகாரத்துடனான ஆணும் தம் பகைமை மற்றும் முரண்பாடுகளுடன் உறவு கொண்டிருந்தார்கள். இதற்கு சமுதாயத்தில் சொத்துமதிப்பின் மேல் வந்த அந்தஸ்து காரணமாக இருந்தது. இந்த ஒருதாரமணம் வரலாற்றுரீதியில் முன்னேற்றமாக இருந்தாலும், அத்துடன் அடிமைமுறையும், தனிச்சொத்தும் வந்தது ஒரு பின்னடைவு தான். இந்தக்கருத்து இயக்கவியல் இரண்டாவது மூன்றாவது விதிகளை நன்றாக தெளிவுபடுத்துகிறது. ஒரு தாரமணம் நல்ல நாகரீகவளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், அதன் அடிமைமுறையும் தனிச்சொத்தும் சார்பு நிலையில் அதன் பின்னடைவாகும். எதிர்ப்பின் எதிர்ப்பு எதைக்கொண்டு எதை தள்ளுவது என்பது இயற்கையின் தேர்வாக அமைந்தது. இன்னும் ஒரு முரண்பாடு சேர்ந்து கொண்டது தனிச்சொத்தின் தொடக்கத்தில் அடிமை உழைப்புக்கு அருகில் கூலி உழைப்பும் தோன்றியது. சுதந்திர மனிதனின் இந்த கூலி உழைப்பை போல பெண் அடிமையின் பக்கத்தில் சுதந்திர பெண்களின் விபச்சாரத்தை தொழிலாக கொள்வது தோன்றியது. நாகரீக சமுதாயத்தில் இதுபோல இரு தரப்பும் இரு பேச்சுமாக சுய முரண்பாடுகளைக்கொண்டு இருந்தது. உண்மையைச்சொன்னால் நாகரீகத்தின் இந்த அபாரவளர்ச்சி என்பது இந்த சுயமுரண்பாடுகள்தான் வரலாற்றில் நிறைய பக்கங்களை நிரப்பியது. இன்றளவும் பொதுமகளிர் முறை விபச்சாரம் ஆளும் வர்க்கத்தினரின் பேச்ச அளவு கண்டிப்புடன் நின்று விடுகிறது இதனால் ஆண்களை விட பெண்களின் பாதிப்பை அதிகம்.திருமணஉறவின் வெளியே காதல்தேடும் ஆண்கள் மேல் விழுவது சிறு கரையே, ஆனால் பெண் மேல் விழும் பழி அவளை சமுதாயத்தில் இருந்து வெளியேற்றுகிறது. தன் கற்பூரிமையை நிரூபிக்க சீதையை போல் தீயுடன் விளையாட முடியாத நிலை தான் பெண்களுக்கும். குழுமணத்தின் வடிவில் உள்ள தீயில் தோன்றிய பாஞ்சாலியின் உறவில் இந்த பிரச்சனை இல்லை. இந்த நிகழ்ச்சியில் மனத்தின் கால வரிசையை கொண்டு எந்த காவியம் முதலில் எழுதப்பட்டது என்பதை உன்னால் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.

என் உயிரே தூய்மையான உறவையும் காதலையும் பற்றி உன்னுடன் பேச ஆவலாக தான் உள்ளது.ஆனால் அதற்கு முன் இன்னும் நீ அறிய வேண்டியதை தெளிவு படுத்துகிறேன். இந்த ஒருதாரமணத்தின் இரண்டாவதாக உள்ள முரண்பாடு விபச்சாரத்தின் விளைவாக சொகுசாக வாழும் கணவன் அருகில் புறக்கணிக்கப்பட்ட மனைவி நிற்கிறாள். நாம் இந்த முரண்பாடுகளையும் சரிசமமாகத்தான் பார்க்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட மனைவி கணவனுக்கு பாடம் போட்ட நினைக்கிறாள். மனைவி முன் இப்பொழுது இருவர் தோன்றுகிறார்கள். ஒன்று கணவன் இன்னொன்று காதலன்.பெண்களை மீண்டும் ஆண்களே வென்றார்கள். சமுதாயத்தில் மீண்டும் கூடாஒழுக்கம் என்று பெண்ணே மீண்டும் தண்டிக்கப்பட்டாள். கணவன் மற்றும் காதலன் எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள்? இருவரும் ஒரே வர்க்கம். இப்படி சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பெண் ஒருபுறம் என்றால் கற்பு நெறியுடன் வாழ்ந்த பெண்களுக்கு உடன்கட்டை என்ற பலன் கிடைத்தது. இதை கர்மபலன் என்றோ நன்னெறி என்றோ கொண்டால் அது விபரீதம் தான். மனைவியின் கூடா ஒழுக்கம் தண்டிக்கப்பட்டது. ஆனால் ஒழிக்க முடியவில்லை ஒரு தாரமணமுறைக்கு அருகிலேயே இந்த சமுதாய உறவு வந்தது. மீண்டும் குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை ஒரு தார்மீக நம்பிக்கையை கொண்டு காண வேண்டியதானது. இந்த முரண்பாட்டை தீர்க்க code of napolèon 312 ஆவது ஷரத்து "மணவாழ்க்கையில் கருவுற்ற குழந்தைக்கு கணவனை தந்த ஆவார்"நெப்போலியன் இச்சட்டம் அவரது சொத்து அவரது மகனுக்கு செல்ல வழிவகை செய்தது. இன்றும் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் தீர்ப்புகள் இதைக் கொண்டு நடக்கின்றன. 3000 ஆண்டுகளாக உள்ள ஒரு தரமணத்தில் இறுதி விளைவு இதுதான்.

என் அன்பே உன்னால் ஒன்றை நினைவில் கொள்ள முடியுமென்றால் இதைக் கொள்" நாகரீகம் தொடங்கிய காலம் முதல் வர்க்கங்களாக பிரிந்த சமுதாயம் அதன் பகைமைகளிலும் முரண்பாடுகளிலும் இயங்கி வருகிறது".இதுதான் அனைத்தின் சாரம். இயக்கவியலின் முதல் விதியும் இதுவே, இதுவே நிதர்சனம், இதுவே உண்மையான உண்மை, உண்மையான மகாவாக்கியமாக இதை உணர்ந்து இதை அறிந்தால் இங்கு நாம் காணும் காட்சிகள் தெளிவாகத்தெரியும். காட்டாற்று வெள்ளத்தில் உள்ள மரத்தின் பெரும்பகுதி முடிந்தவரை வெள்ளத்தை தடுக்கலாம், ஆனால் அது நிரந்தரமாக அங்கே இருக்க முடியாது. மதம் என்ற சொல் பிடித்து நிறுத்துதல் என்ற பொருள் கொண்டது. மாறிவரும் உலகில் மாற்றத்தை பிடித்து நிறுத்துவதுதான் மதத்தின் வேலை தாரணாத் தர்மமித்யாஹி” (மகாபாரதம்- கர்ண பர்வம்) என்று சொன்ன கூற்றை நினைவு கூறுகிறேன். இந்த இயக்கத்தின் வெள்ளத்தில் அணைகட்ட அனைத்து மதங்களும் தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தது என்பதில் ஐயப்பாடு வேண்டாம். முதலாளித்துவத்தின் அடிப்படைத்தேவையாக உள்ள ஒரு தாரமணம் அதனால் ஏற்படும் குடும்பத்தின் தனிநலம் மற்றும் சொத்துடைமை ஆகியவை சமுதாயத்தின் பலகீனக்கூறுகளாகும். இந்த முதலாளித்துவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு, நீதி, மதம் என்றும் தோளோடு தோள் கொடுத்து காக்கும். அரசும் சட்டமும் தத்தம் கடமையைச்செய்ததுபோல், மதங்களும் தம் கடமையை செய்தது. இந்துமதம் மணமுறிவை ஏற்காதவை, கத்தோலிக்க திருச்சபைகளும் இதையேதான் செய்தது. இஸ்லாமியர்கள் ஒருதாரமணதிற்கு வரவேஇல்லை அதனால் அதைப் பற்றி பேசுவது எந்த விதத்திலும் பயனில்லை. மதங்களில் ஏற்படும் மாற்றத்தைக்கொண்டு மதத்தில் சீர்திருத்தங்கள் தேடுதல் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவதுபோலாகும். மிக எளிமையான உதாரணம் சட்டம் ஒரு குறிப்பிட்ட அளவு குற்றத்தை சட்டரீதியாக அனுமதிப்பது போல ,ஒழுக்க கேடுகள் இல்லாத உன்னதமான கடவுள் புராணங்களை திருத்தி எழுத வேண்டும் என்று கூறிய பிளேட்டோவும், ஃபேவர்பாக்க எழுதிய எஸ்சென்ஸ் ஆப் கிறிஸ்டியானிட்டிமதத்தை பூரணமடைய வைக்க செய்த எல்லா முயற்சிகளையும் இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருபுறம் நவீனகால தேவைகளைக்கொண்டு சீர்திருத்துவதும், மறுபுறம் ஏற்கனவே உள்ள மதக்கோட்பாடுகள் சரிதான் என்று அதன் அர்த்தத்தை புதிதாக புனைவதும், இவர்களிடையேயான முரண் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்னால் ஒன்றை நன்றாக உணர முடிகிறது இவை அனைத்துக்கும் ஆன பின்புலம் நிச்சயமாக அறமோ மதமோ பக்தியோ நாடோ அரசோ அல்ல, இது சந்தையின் மீது அளப்பரிய அதிகாரம் கொண்ட ஒரு முதலாளித்துவத்தின் கருவில் தோன்றிய எண்ணமே அதை மேலே சொன்ன அனைத்தும் நிறைவேற்றுகிறது. இன்னும் சொல்லுகிறேன் வேதமதமாகிய சனாதன மதத்தில் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட காலங்களில் மக்களின் மனப்போக்கு அடிமைநிலையும் மக்களின் எழுச்சியை கொடுக்குமோ என்ற பய உணர்வு ஆட்சியாளர்களிடம் இருந்ததால், வேதத்தை தொடர்ந்து உபநிடதங்கள் இயற்றப்பட்டன. நட்புறவாய் இருந்த கடவுளர்களான இந்திரன் வருணன் ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டு, பிரம்மம் எனும் உயரிய கடவுள் தோற்றுவிக்கப்பட்டது. வால்கா முதல் கங்கை வரை கதையில் வரும் பிரவாஹன் என்னும் பகுதியே இதற்கு சான்று. கர்மவினை, மறுபிறப்பு, விதி ஆகியவை புரட்சி தோன்றாமலிருக்கவும் ஆட்சியாளர்களின் நிலையை காக்கவும் உதவியது. எனினும் காலம் என்ற வெள்ளத்தில் ஓட்டைபடகுகள் கரை சேர முடியுமா? வேதமறுப்பு மதங்கள் தோன்றத்தான் செய்தது. பௌத்தம் சமணம் ஆசிவகம் மதங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டு முதல் தன் சேவையை செய்து, பின் நாளடைவில் அதன் தன்மை மாறவும் செய்தது, வேதமறுப்பு மற்றும் கடவுள் மறுப்பு கொண்ட சமய தலைவர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். அவர்களைப் பற்றி புராணம் ஹிந்து மதப்புராணங்களை மிஞ்சியது. ஒருவரை கடவுள் ஆக்குவது என்பது அவர் சொன்ன கருத்துக்களை மட்டும் கொண்டு அல்ல, பல நம்பமுடியாத மாயாஜால நிகழ்வுகளையும் புனைவுகளையும் கொண்டே அது உருவாக்கப்படுகிறது. பின்னர் கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் தோன்றிய பக்தி இயக்கங்கள் இதன் முன்னுள்ள அனைத்து புரிதல்களையும் புரட்டிப் போட்டது. இவை அனைத்தும் மதம் இயக்கவியல் விதிகளின்படி தன்னை உருவாக்கி தகவமைத்துக்கொண்டதை நமக்கு உணர்த்துகிறது.

இதுவரை மதங்கள் எவ்வாறு சமூகத்தின் நிலையை ஒரு சாரரின் நலத்துக்காக உருவாக்கி, பின் பரிணமித்து வந்தது என்பதை பார்த்தோம். இந்த மாற்றங்களில் ஏற்பட்ட ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருந்தது நாடுகளைக்கடந்த வாணிபமும், பொருள் உற்பத்தியும்தான். அது அரசாட்சியை மாற்றி தொழில்துறையில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. அரசுகள் முதலாளித்துவத்தின் கைக்குள் அடங்கியது.இதன் எதிரொலி சமூகம் மற்றும் மதத்திலும் ஏற்பட்டது. அதற்கு சட்டங்களில் சீர்திருத்தம் செய்தது. இதுவரை இல்லாத வகையில் தொழில்துறையில் வர்க்கபிரிவிர்க்கு இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டன இந்த ஒப்பந்தங்கள் ஏட்டளவில்தான் இருந்தது. சட்ட ஒப்பந்தங்கள் ஏற்பட்டு அது நடைமுறையில் நடப்பதாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுபோன்று திருமணத்தில் இருசாராருடைய ஒப்புதல் மற்றும் பொருளாதார சமநிலையை முன்னெடுத்து திருமணம் சட்டரீதியாகப்பட்டது. இருந்தும் ஒப்பந்தங்கள் என்றும் இருதரப்பினருக்குமான உரிமைகளை கொடுப்பதில்லை. அப்படி இருப்பின் ஒப்பந்தங்களின் பின்னும் சட்டரீதியான விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.மேலும் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பே மறுக்கப்படுகின்ற நிலை உள்ளதால் ஒப்பந்தங்கள் எம் மாத்திரம். சட்டம் என்பது முழுமையான பாதுகாப்பு என்பது ஒரு சாராருக்குதான். அனைவருக்குமானது என்பது ஏட்டளவில் தான் உள்ளது. இதே நிலைதான் ஆண் பெண் வர்க்கத்திற்கு சட்டத்தின் முன்னுள்ள நிலையும். இது நிதர்சனத்தில் சமமற்ற நிலைதான் நாம் சிறிது பின்னோக்கிப்பார்த்தால் தாய்வழிச்சமுதாயத்தில் பெண்கள் கொண்டிருந்த சமுதாய நிலையிலிருந்து அவள் கீழே தள்ளப்பட்டதற்க்கு அவர்கள் சமூக உற்பத்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதே மிக முக்கிய காரணமாகும். அன்றைய நிலை இல்லாமல் பெண்களின் வீட்டு நிர்வாகம் அதன் பொதுதன்மையை இழந்து விட்டது. சமுதாயத்தில் வீட்டு நிர்வாகம் முக்கியத்துவம் பெறவில்லை. அது ஒரு தனிப்பட்ட சேவையானது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை கொண்டு சமுதாயத்தின் வளர்ச்சியை அளவிட முடியாது, செய்யவும் கூடாது. குடும்பம் என்பது ஒரு தனிப்பட்ட தேவை மற்றும் சுயநலத்தை கொண்டதாக உள்ளது. இக்கூறுகள் இரண்டிலுமே அக்கரை பெறாத வீட்டு நிர்வாகத்தை கொண்ட பெண்களை பெண் அடிமை என்று சொல்வது தானே சரியானது. ஒரு பெண்ணின் சமூகஉற்பத்தி என்பது அவளின் குடும்ப கடமைகளுக்கு இடையூறாகவே உள்ளது. இந்த மாறுபட்ட முரண் பெண்ணினத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. வீட்டு நிர்வாகமும் குழந்தை வளர்ப்பும் பெண்களின் தொழில்முறை முன்னேற்றத்தை பெரிதும் பின்னடைவுக்கு தள்ளுகிறது. இந்த முரண் ஏன் என்று உன்னால் இப்பொழுது உணர முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய குடும்பநிலையில் சமுதாய என்ற ஒரு கட்டமைப்பு ஏட்டளவில் தான் உள்ளது. வலுவான குடும்ப கட்டமைப்பு சமுதாயத்தை பெருவாரியாக பாதித்தது. முன்பு வீட்டு நிர்வாகமும் குழந்தை வளர்ப்பும் பொதுதன்மையுடன் சமுதாய கடமையாக இருந்தது . அதை குடும்பம் ஏற்றபொழுது பெண்ணடிமைநிலை உருவானது.

என் அன்புக்குரியவளே இதுவரையிலும் ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதனின் மணஉறவுகளும், குடும்பமும் கடந்து வந்த பாதை உனக்கு ஓரளவு தெளிவுபடுத்தி விட்டேன். இனி இதற்கு என்னதான் மாற்று என்ற கருத்தை வைக்கிறேன். இதுவரை நான் சொன்னதை ஏற்றவர்கள் கூட, நான் இனி சொல்லப்போவதை ஏற்பார்கள் என்று கூற முடியாது. உனக்கு இங்கு நடந்த எல்லா படிநிலை வளர்ச்சியும் வரிசையில் புரிந்தால் தனிச்சொத்து என்ற ஒன்று எவ்வாறு இவ்வளவிற்க்கும் மூலகாரணமானது என்பது புரிந்து இருக்கும். என்றாலும் அந்த மாற்றம் வருங்காலங்களில் இன்றியமையாதது. பெண்களின் சமூக அந்தஸ்து அவள் சமூகத்தில் பங்கேற்கும் பொருளாதார அலகைக்கொண்டுதான் அளக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரத்தை குடும்பத்தில் எதிர்பார்த்தல் என்பது அர்த்தமற்றது.familia என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்று நீ அறிவாய். குடும்ப ஆதிக்கம் குறைந்து சமுதாயம் வளம்பெற்றால்தான் இந்த வர்க்கபோராட்டம் ஒரு முடிவுக்கு வரும். தனிசுதந்திரம் தனிபேச்சுரிமை என்ற அர்த்தமற்ற கற்பனையான கருத்துக்களால் சமுதாயத்தில் என்றுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. மனிதன் ஒரு சமுதாயவிலங்கு அதனால்தான் அவன் பல்வேறு படிநிலை வளர்ச்சியை அடைந்தான். ஆனால் இன்று அவன் சமுதாயமாக வாழவில்லை அந்த சமுதாயமும் உற்பத்தி உறவுகளைக்கொண்ட சமுதாயமாக இல்லை. இவன் இன்று சாதி மதம் ஆகியவற்றை கொண்ட சமுதாயங்கள் எந்த விதத்திலும் பெண்களின் நிலையை மீட்டெடுக்க முடியாது. நாம் காணும் சமுதாயமானது உழைப்பை ஆதாரமாகக்கொண்ட சமுதாயமாக இருத்தல் வேண்டும். நீயே சொல் இன்று கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட இதை ஒத்துக் கொள்ள மாட்டான். அவனைப் பொறுத்தவரை அது அவன் தொழில், மதத்தில் உள்ள தர்மம், வினைப்பயன், பாவ விமோசனம் போன்ற கூறுகளால் உருவான ஒரு தொழில், உழைப்பே இல்லாத தொழில். மேலும் நாம் காணும் சமுதாயம் அனைவருக்குமானது என்றால் எல்லோரும் உழைத்து சமுதாய பங்கை ஆற்றும் போது அங்கு தனியுடைமை என்பது மறைந்து தான் போகும். இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறையும்போழது வெகு நிச்சயமாக அதன் அடி திருமணத்தில் தான் விழும். இனி திருமணம் என்பது இருவரின் ஒத்த விருப்பம் என்ற முறையிலேயே அது அமையும். குடும்ப நிலை சமுதாயத்தின் வலுவான கட்டமைப்பில் கரைந்து போகும். வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு போன்றவை பொதுத்தன்மையோ சமுதாயப் பணியோ ஆகும். இனிபெண்கள் உழைக்க எந்த தடையும் இல்லை. பாலுறவு சுதந்திரம் கொண்ட ஆண் பெண்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாததாலும் விபச்சாரம் மற்றும் அடிமைத்தனம் கூலியுழைப்பு போன்றவை நலிந்து போகும். இனி மிஞ்சி இருப்பது கள்ளக்காதல் தான் சுதந்திரமான திருமணமும் மணரத்துரிமையும் பொருளாதார சமநிலையும் இருக்கும் பொழுது இது நிச்சயமாக மறையும் என்பதில் சந்தேகம் இல்லை. திருமணம் என்பது ஒரு உன்னதக்காதலால் மட்டுமே உருவாகக்கூடியதாக இருக்கும் என்பதில் என்ன சந்தேகம். சற்று நினைத்துப் பார் எவ்வளவு உன்னதமான சமுதாயம் அது மருத்துவமும் கல்வியும் அத்தியாவசிய தேவைகளுடன் இணைந்து விட்டால் இவை எல்லாமே ஒரு சமுதாயத்தின் சமநிலையில் இருக்கும் என்றால் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு உன்னதமானதாக இருக்கும். ஆனால் இன்று வரை இது மனிதர்களுக்கு சாத்தியமானதாக தோன்றாத காரணம் யாதென்று உனக்குத் தெரிகிறத?

நான் கூறிய சமுதாயத்தில் யார் யார் இல்லையோ அவர்களே இத்தகைய உன்னத தத்துவத்தின் எதிரிகள். அவர்கள் இதை அறிந்தும் செய்யலாம், அறியாமலும் செய்யலாம். ஆனால் இன்றளவில் சமுதாயம் தெளிவு பெற முடியாத இடியாப்ப சிக்கலாக உள்ள காரணங்கள் உருவாக்கப்பட்டவை. பணம் படைத்த முதலாளிகள் மதகுருமார்கள் அதிகாரவர்க்கத்தினர் அரசியல்வாதிகள் சமூகஉற்பத்தியில் பங்கு கொள்ளாதவர்கள் கலைத்துறையினர் பிச்சைக்காரர்கள் மற்றும் சோம்பேறிகள் இவர்கள் முதலில் இதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், பலவித காரணிகளால் மனிதன் ஒன்று படமுடியாத சூழ்நிலையையும் உருவாக்கினர்.அப்படியானால் உழைக்கும் வர்க்கத்தினர் இந்த தத்துவத்தை வரவேற்பார்களே என்று தானே கேட்கிறாய்? ஆமாம் ஆனால் அவர்களுக்கு இதனைப்பற்றி முழு புரிதல் ஏற்படவில்லை, அது ஏற்படாமல் இருக்க மதம் செய்யும் பெரும்உழைப்பு இன்றுவரை எடுபடுகிறது. கர்மவினை, தலைவிதி, முன்ஜென்மபாவம் எதிர்காமல் உன் கடமையைச் செய், அதன் பலன் மறுபிறவியில் கிடைக்கும், தானமும் தர்மமும் உன்னை நற்கதிக்கு இட்டுச் செல்லும், உன் அறிவினால் அனைத்தையும் அறிய முடியாது, பிரம்மம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது, பொருளீட்டல் புண்ணியத்தின் விளைவு, உன் அனைத்து உழைப்பும் பொருளும் உடலும் இறைவனிடம் சேர்த்து விடு, சுயமறுப்பு, துறவறம், புலனடக்கும் இவை அனைத்தும் உன் புலன்களால் கண்டதை நிதர்சனத்தோடு ஒப்பிடா வண்ணம் உன் அறிவை சங்கிலி இட்டுக் கட்டியது. மேலும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இந்நாட்டில் எங்கும் நிலவுகிறது.சாதியபடிநிலை சமுதாயத்தை துண்டாடியது உண்மை. தனக்கு மேல் எத்தனை சாதிகள் இருந்தாலும் தனக்கு கீழ் ஒருவனைக்கொண்டு நாம் கடைநிலையில் இல்லை என்று தேற்றிக்கொள்ளும் எத்தனையோ பிறவிகள் நம்மிடையே உள்ளனர். இதைவிட மிகப்பெரிய குழப்பம் மக்களின் மனங்களில் உள்ள ஒப்பீட்டு குணம் மற்றவர்களுடன் அனைத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து பொருளலவில் நாம் எவ்வளவு மேலானதாக இருக்கிறோம் என்று நினைப்பது. சாதாரண மக்களிடையே மட்டும் இத்தகைய காரணிகள் என்றால் ஆளும் வர்க்கமும் முதலாளிகளும் தன் பங்கிற்கு மேலும் இந்த சமுதாய சீர்கேடுகளை உருவாக்குகின்றனர். இன்றைய நிலையில் தனிசொத்துரிமை செய்த அரும்பெரும் பங்களிப்பு ஊழல். அது இல்லாத நாடுகளே இல்லை எனலாம் ஒரு மனிதனின் அளவு மீறிய தன்னலமும் ஆசைக்குத் தேவைக்குமான வித்தியாசம் தெரியாமல் சேர்க்கும் செல்வம் நம் தலையை சுற்ற வைக்கிறது. பணம் படைத்த முதலாளிகள் நிலையும் இதுதான் அவர்கள்தான் ஆளும்வர்க்கத்தினரின் பாதுகாவலர்கள்.

என் அன்பே இமயத்தைவிட உயர்ந்து நிற்கும் இக்கூட்டம் உனக்கு மிகவும் வியப்பை கொடுக்கிறதா கவலை கொள்ளாதே ஏனென்றால் நீ என்றும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு கருத்து நான் ஏற்கனவே உனக்கு கூறி இருக்கிறேன். இந்த அனைத்து வர்க்கங்களும் தம் பகைமை மற்றும் முரண்பாட்டில் தான் உள்ளது. இதன் அளவுமாற்றம் கண்டிப்பாக பண்புமாற்றத்தை உருவாக்கும். பிறகென்ன நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற மூன்றாவது இயக்கவியல் விதி தன் லட்சியத்தை வெல்லும். இந்த உலகம் ஒவ்வொரு வினாடியும் இயங்கி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகச்சிறந்த அறிவாளிகள் பழமையை போற்றியும் அதை நற்காலமாக காட்ட முனைகின்றனர். உலகம் என்றுமே பின்னோக்கி இயங்கியது கிடையாது. அது முந்தைய நிலையின் சில கூறுகளை மட்டுமே தன்னகத்தை கொண்டு தொடரும் இது இயற்கையின் தேர்வு ஆகும். இன்னும் ஆயிரம் தத்துவங்கள் வந்தாலும் அவைகளுடன் ஆயிரம் தத்துவங்கள் போட்டியிட்டாலும். இயக்கவியல் தத்துவம் போட்டி இடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த போட்டிகளை நடத்துபவையாகவே இத்தத்துவம் உள்ளது. மாற்றம் நிகழும் என்ற ஒரு நம்பிக்கை உனக்கு குறைவாக இருப்பின் நான் இன்று சொல்வதைக் கேள். இருநூறு வருடங்களுக்கு முன்பே யாரேனும் அனைத்து அரசாட்சிகளும் முடிவுக்கு வரும் என்று கூறினால் அந்த மக்களின் நம்பிக்கை எந்த கதியில் இருக்குமோ அது போலவே நாம் கூறும் இந்த மாற்றம் நிச்சயமானது. என் கண்ணே இதுவரை நான் அறிந்த உணர்ந்த புரிந்துகொண்ட எல்லா உரைகல்லில் தரம் பார்த்த கருத்துக்களை உன்னோடு பகிர்ந்து கொண்டேன், ஆதிகாலம் முதல் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலம் வரை மனிதனின் அளப்பரிய செயகளும் வர்க்கப்பிரிவினையும் உலகநாடுகளில் இதனால் ஏற்பட்ட மாற்றங்களும் நாம் கூறுவடிவில் மிகச் சுருக்கமாகக்கண்டோம். இனி நாம் செய்ய வேண்டியவை என்னவென்று காணலாம்.

என் அன்பே நான் கூறிய கருத்துக்கள் உனக்கு ஒப்புடையவை என்ற ரீதியில் ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் உன் நிலை என்னவென்று நீ அறிந்திருப்பாய், நாம் காணும் சமுதாய எவ்வாறானது என்பதையும் நீ உணர்ந்திருப்பாய். இம்மாற்றங்கள் நிகழ தலைமுறை தாண்டிய ஒரு அறிவு கடத்தல் தேவைப்படுகிறது. இன்றைய காலத்தில் வரலாறு மாபெரும் திரிபுக்கு உள்ளாகிறது. அதனால் சரியான சிந்தனையும் அறிவும் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம். இரண்டாவது நாம் கொண்ட இந்த கொள்கையை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வரும் தலைமுறை கொள்ளும் மாற்றம் சீராக இல்லாமல் அது ஒரு தாவுதலாக இருக்கும். இந்த தாவுதல் அடுத்த தலைமுறை சமுதாயத்தில் மாபெரும் மாற்றங்களை கொடுக்கும். மூன்றாவது உன்னை குடும்பத்தலைவி என்று கூறுவதை விட நீ ஒரு சுதந்திரமான சமுதாய உற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பெண்ணாக, சமுதாயத்தில் உன் தரம் உயரும் என்று நான் நம்புகிறேன். அதிகப்படியான குடும்ப உணர்வுகள், வீட்டின் நிர்வாகம் பெண் அடிமைத்தனம்தான் என்று உனக்கு நன்றாகவே புரிந்திருக்கும். நான்காவது நான் காணும் சமுதாயத்தில் ஒருதாரமணம் ஒரு உன்னத நிலையை அடைவதை நீ உணருகிறாயா? இதற்கு முன்பு பேரளவில் இருந்த ஒருதாரமணம் உண்மையில் நடைமுறையில் வருவதை எதிர்பார்க்கலாம். அதற்கு ஆண் பெண்ணின் பொருளாதார சமநிலை தேவைப்படுகிறது என்பது உனக்கு தெரியும். நாம் காணும் இச்சமுதாயம் ஒரு கற்பனை வாதம் என்று யாராலும் ஒதுக்கி விட முடியாது. இதற்கு இணையான ஒரு தத்துவ தேடலை கொண்டு சமுதாய வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் முடியாது.இத்துடன் என் கட்டுரைகளான மெய்யியல்பார்வை , இன்றையநிலையில் மெய்யியலின் தேவை ஆகியவையும் உனக்கு தெளிவை கொடுக்கும்.

உன்னுடன் நான் வாழ்ந்த காலத்தில் நான் கொடுக்கும் மாபெரும் பரிசாக இந்த கருத்தாடலை நான் பார்க்கிறேன். நம் தலைமுறையும் இதை அறிந்து மேலும் சமுதாயம் முன்னேற்றத்தில் பங்கெடுக்க நாம் முனைவோம்.


Comments