தத்துவப்பார்வை
இத்தனை
வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து
கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு
விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ,
அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ
கருதலாம் அல்லது விட்டு விடலாம்.
இந்த
நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான்
இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால்
அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா
நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம்
பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம் ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த
சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து
வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில்
ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்டால் தேவலாமே? பிரம்மத்தில் ஆக்சஞைகையால்
தான் கண்டுபிடித்தேன் என்று கூறுவது அவர்கள் தன் அறிவின் படிநிலையில் சற்று
தடுமாற்றம் கொண்டார்களோ என்று யோசிக்க வைக்கிறது. இந்த லோகாயசக்திக்கு எந்த விதமான
திருவிளையாடல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கற்காலத்தில் நியூட்டனின் கோட்பாடுகள்
தேவையில்லாதது. நியூட்டன் காலத்தில் சார்பு நிலைக்கு கொள்கை தேவை இல்லாதது. இப்படி
எடுத்துக் கொள்வோம் நியூட்டனும் ஐன்ஸ்டினும் பிறந்த வரிசையை அப்படியே மாற்றினால்
வானவியல் ஆராய்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கக்கூடும். இதை
உங்களால் ஊகிக்க முடிந்தால் கண்டுபிடிப்பின் வரிசையில் உள்ள இயற்கை விதி புரியும்
என்று நினைக்கிறேன். மீண்டும் நாம் லோகாயதசக்திக்கு வருவோம். இப்படி இயற்கையை
பார்த்து வியந்த சிலர் இதன் நிதர்சனத்தை ஏற்காமல் “அறிவைத் தாண்டி சிந்தனை என்ற ஒரு
கருத்தைக்கொண்டு இயற்கை இயக்கப்படுகிறது” என்ற ஒரு கருத்தை உருவாக்கி அதை இயக்க ஒரு
பொறியாளரை உருவாக்கினர். இப்பொழுதுதான் அவர்களின் மனம் நிறைவுற்றது. தான்
உருவாக்கிய இந்த எண்ணம் என்பது அவரவரின் குழந்தை போலாகும். தன் குழந்தையை தான்தானே
வளர்க்க வேண்டும்?அதை நாளௌமேனியும் பொழுதுறு வண்ணமுமாக வளர்த்து, பலவிதமான
ஆற்றல்களையும், சுதந்திரத்தையும் உள்ளடக்கிய பின்னர் அதை தன்னிச்சையாக மாற்ற அதை
லோகாயதசக்தியிலிருந்து பிரித்து. “சக்தி என்பது ஒன்று அதுவே கடவுள் அதுவே பரம
தத்துவம்” என்று கூறி அதன் பின் “உலகப்படைப்பு எண்ணத்தின்
மூலம் உருவானது” என்று முயன்றனர் கருத்துமுதல்வாதிகள்.
இப்பொழுது தான் உருவாக்கிய குழந்தை வளர்ந்து பிரம்மாண்டமாக இருப்பதை பார்த்து
உருவாக்கியவர் தன் புலன்களையே நம்பி அதை வணங்கத் தொடங்கினர். தன் சுதந்திரம் கடவுளிடம்
கொடுக்கப்பட்டது என்பதை உணர வெகு காலம் பிடித்தது அவர்களுக்கு. பிறரை
அடிமைப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பறித்து தன் சுதந்திரத்தை காப்பாற்ற
கடவுளின் நெருக்கம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஒவ்வொரு நொடியும் தான் உருவாக்கிய
கண்டுபிடிப்பை எண்ணி வியந்து மகிழ்ந்தனர்.
உதாரணமாக
தண்ணீர் சேகரிக்க குடுவை இல்லாத காலம் ஒருவன் சுரைகுடுவை ஒன்றை உருவாக்கி அதை
உபயோகித்து வந்தான். அவன் அதை உபயோகிக்கும் பொழுது பெறும் இன்பம் மிகவும் அலாதி.
மற்றவர்கள் நீ இதை எப்படி செய்தாய் என்று கேட்டால் இன்பம் பெருகி வழிந்து ஓடும்.
இது மனித இயல்பு இது மனிதனுக்கு மனிதன் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் இதை மறுக்க
முடியாது. இந்தக் குடுவையின் மீது அவன் வைத்த பற்று பொருட்பற்றை தாண்டி அவன்
அறிவைத் தாண்டி அவன் விஞ்ஞானசாரம் இதில் சேர்ந்து உள்ளது இதை அவனால்
எக்காரணத்திலும் விட்டுவிட முடியாது. பின் சுரைகுடுவை நீர்க்கலமாகவோ மற்ற
பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும், இன்று அப்படியே விழுங்க கூடிய நீர்முட்டைகள்
வந்துள்ளதே! இதுவும் விஞ்ஞானம் தானே. நிரையைப்போல சக்தியைப்போல அறிவும் என்றும்
அழிவதில்லை அது வேற ஒரு தத்துவமாகவும் விஞ்ஞானமாகவோ மாற்றம் பெறுகிறது. மீண்டும்
சொல்கிறேன் கண்டுபிடிப்புகள் தேவையின் அடிப்படை என்று கொண்டால், கடவுள் படைப்பும் தேவையின்
அடிப்படையே ஆகும். இந்தத்தேவை இடம் மற்றும் கால வித்தியாசப்படி சமுதாய நோக்கில்
அல்லது தனி மனித விருப்பப்படியோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் தான் உருவாக்கிய
பொருளை
மனிதன் ஒரு காலத்திலும் அழித்தது இல்லை அதை பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி உருவ,
வடிவ, வினையாற்றல் வரையறையில் மாற்றத்தை கொடுத்து கொண்டு தான் இருப்பான்.
இந்த
உலகில் விலங்குகளை விட அதிவேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு பொருள் கடவுள்தான்
என்பதை மறுக்கவே முடியாது. கடவுள் என்பது எண்ணமாகத் தோன்றி இன்று பொருளாகவே உள்ளது.
எண்ணத்தின் சாரத்தை யாரும் தேடுவதில்லை, பொருளின் சாரத்தையே இங்கு தேடுவர். கடவுள்
அல்லது பிரம்மம் என்பது எண்ணமாக தோன்றி, பின்னர் அது உருவம் பெற்று, கதைகள் பெற்று,
காவியம் படைத்து, பொருளாக மாறி நிற்கிறது. இன்று அதை தம் புலன்களால் உணரப்பட்டால்
அது தவறு என்று கூறி நம்மை புலன்களைத் தாண்டி அறிவால் உணர வேண்டும் என்று அறிவுரை
கூறுகின்றனர். இந்தப்பொருள் ஒரு அடையாளமே இதன் சாரம்தான் முக்கியம் என்கின்றனர். நீங்கள்
அவர்களிடம் சென்று நீங்கள் எண்ணமாக வைத்து அதனை பொருளாக மாற்றி பின்னர் அதன்
சாரத்தை உணரகூறுவது தலையைச் சுற்றி மூக்கை தொடுவது போல் உள்ளது என்று கேட்கலாம்.
கேளுங்கள்! இதுவும் இயக்கவியலில்தான் வருகிறது. வாதம், பின் எதிர்வாதமாக மாறி,
பின் பேச்சு வார்த்தையாக மாறுகிறது. நாம் இதற்காக ஹெகலுக்கு நன்றி கூற வேண்டும்.
நம் புராணங்களில் உள்ள எந்த கதையுமே நாம் நேரடி பொருள் கொண்டு அறிந்தால் அதை
மறுப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் தம் திறமை அனைத்தையும் வியாக்கியானம்,
பாஷ்யம், என்ற பெயரில் கூறப்படும் விளக்கங்கள் மனிதனின் அறிவு இப்படியும்
சிந்திக்குமா என்று தோன்றும் அளவுக்கு வியப்பானதாகவே இருக்கிறது. அப்படிச்செய்தவர்கள்
பலர் அவர்களை நாமும் அறிவோம். அவர்களின் சித்தாந்தம் துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்துவைதம்
இன்னும்பல. சித்தாந்த குருக்கள் அனைவரும் தங்கள் சித்தாந்தத்தை படித்த பிறகு பகவத்
கீதையின் பாஷ்யம் எழுதினார்கள் என்றால், தன் சித்தாந்தத்தை கீதையின் வழியில்
காட்டினார்கள் என்றுதான் கூற வேண்டும். நினைத்துப் பாருங்கள் மூன்று பேர் செய்த
ஆராய்ச்சியில் கீதை மற்றும் கிருஷ்ணனின் அவலநிலையை. நீலகேசியில் கூட இதே நிலைதான்.
இதை பார்க்கும் பொழுது சமயக் கணக்கர் திறன் கேட்ட காதை (மணிமேகலை)என்பது மிகவும் தத்துவவிஜாரமான
முடிவு என்று தான் சொல்ல வேண்டும். இப்படி வாதத்தை தன் சுய சித்தாந்தத்திற்காக
பயன்படுத்தி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களிள் பலர் துறவு நிலையில்
இருந்ததாகவே உணர்கிறோம். அவர்களுக்கு வேண்டியது சமுதாய மாற்றம் என்று சொல்வதை விட,
கடவுள் எண்ணம் என்பது, வெகுஜன மக்களின் மனதில், இயல்பு வாழ்க்கை, இன்பதுன்பங்களைத்தாண்டி
ஆழமாகப் பதிய வேண்டும் என்பதுதான்.
இதை
காரண காரிய விதி அல்லது ஹேதுவாதம் என்றே சொல்ல வேண்டும். இதை நன்றாக விளக்கிச்சொல்ல
வேண்டி இருக்கிறது எனக்கு முன் பல ஆயிரம் அறிஞர்கள் இதைப் பற்றி
கூறியிருக்கிறார்கள். அவர்களின் வழியிலேயே நானும் இதை விளக்க விரும்புகிறேன்.
அவர்களின் அனுபவமான பிரயோகம் என்ற காரியம் என் சிந்தனை தூண்டுதலில் காரணமாக
அமைகிறது. அதற்கு முன் நாம் வைத்திருக்கும் சில அறிவு சேமிப்பை சரிபார்த்துக்
கொள்வது அவசியம்.
1. எந்த வரலாற்று நிகழ்வையும் சரி அல்லது தவறு
என்று தீர்மானிப்பது நம்மை இருளில்
ஆழ்த்தி விடும்.
2. வரலாற்றில் நாம் போற்றுகின்ற மனிதனாக எவருமே
இருக்க முடியாது. காலமும் இடமும் மாறும்பொழுது எதார்த்த வாழ்க்கையிலும் மாற்றங்கள்
வரும் கூடுமானவரை தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஆராய்ச்சியாளர்களின்
சங்கடமே இதுதான் ஒருவரை அனைத்திலும் சிறந்தவராக காட்ட வேண்டும் என்ற முடிவுடன்
அவர்கள் தங்கள் வாதத்தில் மிகவும் சிரமப்படுத்திக் கொள்கிறார்கள். (புத்தரின்
காலத்திலும் ப்ளேட்டோவின் காலத்திலும் அடிமைகள் இருந்தனர் இவர்களின் எந்த
கோட்பாடும் அடிமை விடுதலையை பேசவில்லை).
3. தத்துவங்களை முடிந்த அளவில் மதம் என்ற பிடியில்
சிக்காமல் அணுக வேண்டும். தத்துவங்களில் இருந்து கணிதம், அறிவியல், விஞ்ஞான
விதிகள் தோன்றின அது போலவே தத்துவங்களை பிரயோகித்து தங்கத்தை உரசி பார்ப்பது போல்
உரசிப் பார்த்தல் அவசியம்.சில தத்துவங்கள் தர்க்கங்களை தவிர்க்கச்சொல்லும்,
தேவையான சில தகுதிகள் உண்டு என்றும் கூறும். இங்கு ஸ்டோயிக்(stoic) தத்துவங்களின்
தர்க்க கொள்கையை நினைவு கூற வேண்டும்."தத்துவ இயல் ஒரு பயிரை போன்றதாகும் தர்க்கமே
அதை பாதுகாக்கும் முள்வேலி, பௌதிகவியல் மண்ணை போன்றது நடைமுறையியல் விளைச்சலைப்
போன்றது".
வேதங்கள்
சில நேரங்களில் தர்க்க பேச்சுகளாகவே உள்ளன என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். நாஸதீய
சூக்ததில்
இந்த
உலகத் தோற்றத்திற்கு முன் எதுவும் இருந்ததுமில்லை இல்லாதிருந்ததும் இல்லை என்று
தொடங்குகிறது. இது இரண்டு ரிஷிகளுக்கு இடையே நடக்கும் வாதமாகவோ பேச்சுவார்த்தையாகவோ
இருக்கலாம். இது நாம் ஒரு நடைமுறை சம்பவம் போல் பிறகு விவரமாக பார்க்கலாம்.
உபநிடதக்காலத்தில் ரிஷிகள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கவில்லை.
அவர்களில் சிலர் பௌதீகவாதம், இயற்கைவாதம், பிரம்மவாதம், சிலர் பூதவாதியாகவும்
இருந்தனர் இவர்கள் அனைத்து கருத்துக்களும் கோர்க்கப்பட்டு சூக்தமாக செய்வது ஒரு ரிஷியின்
கடமையாகிறது இந்த சூக்ததின் ரிஷி பரமேஷ்டி பிரஜாபதி ஆவார்.
4. தத்துவங்கள் கால, இட,
தேவை இவைகளின், அதாவது
காலத் தேவை அல்லது இடத் தேவை இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டுமோ காரணமாக
இருக்கலாம். இந்த காரணம் ஒரு தனி நபரின் விருப்பத்திலோ ஒரு சமூகத் தலைவனின்
விருப்பத்திலோ எழலாம். ஆனால் தத்துவங்கள் ஆராய்ந்து பார்க்க ஆராய்ச்சிக்கூடம்
அவசியமானது. அதுவே அந்த தத்துவ சோதனையின் உண்மை தன்மையை ( பிரயோகத்தன்மையை)
வெளியிடும். சில தத்துவங்கள் சமுதாயத்தில் மக்கள் மீது பிரயோகப்படுத்தப்படும். அது
அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தின் தேவையினால் நடக்கிறது. பிரம்ம தத்துவத்தை
உணர்ந்த தோன்றிய உபநிடந்தங்களில் கூறப்படுவது."பிரம்மத்தை அறிந்து கொள்ளும்
ரகசியம் முதலில் பிராமணர்களுக்கு கிடைக்கவில்லை அதனால்தான் எல்லா ஊர்களிலும்
பிராமணர்களின் ஆட்சிக்கு பதிலாக க்ஷத்திரியர்களின் ஆட்சி நிலைபெற்றது".
இதிலிருந்து மறைமுகமாக பிரம்மதத்துவத்தை உருவாக்கியவர்கள் க்ஷத்திரியர்கள் என்று
தெரிகிறது. இந்தக் கூற்று பிரகதாரணியக உபநிடதத்தில் வருகிறது. ஆட்சியின் தேவை
மக்களின் நம்பிக்கை.நடைமுறை வாழ்க்கையின் அவலத்தை மறக்க இம்மை-மறுமை மிகவும் தேவை
என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எண்ண
சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. இதுவும் காரண காரியத்திலேயே வருகிறது.
5. தத்துவங்களின் சமூக அந்தஸ்து – கால-இட
சூழ்நிலையை அனுசரித்து ஒரு கருத்து வெகுஜன மக்களின் நடைமுறை வாழ்க்கையில்
உப்புகுந்து இயக்கப்படுவது, என்பது அதன் உண்மை தன்மையை மட்டும் சார்ந்ததல்ல,அது
வேட்கையின் உணவாக இருத்தல் வேண்டும். தாகம் மற்றும் தலையில் தீப்பிடித்தல் இதில்
யார் தண்ணீர் தேவைஅதிகமோ, அதுபோல் தத்துவ அங்கீகரிப்பு அதன் வேட்கையை சார்ந்தது.
அதை உலகாயதத்தின் வேட்கை என்றும் கூறலாம். எண்ணமுதல்வாதமும், பிரம்மவாதமும்
தோன்றிய காலம் அதிகமான அடிமைகளை கொண்ட இடமாக இந்திய தேசமும் கிரேக்கமும் இருந்தது.
இதை தற்செயல் என்று கடந்து போக முடியாது. ஒரு அடிமையின் முன் இரண்டு பேரும்
வருகிறார்கள். நான் உன் கையை எடுத்துக் கொள்கிறேன் இந்த தேசநலனுக்காக அந்த வலியை
பொறுத்துக்கொள் என்றான். மற்றொருவன் நான் மயக்கமருந்தும் வலி தெரியாமல் இருக்க
போதை மருந்தும் தருகிறேன் என்றான், அடிமைக்கு வேறு வழியே கிடையாது இவைகளில் ஏதாவது
ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அடிமை எதை தேர்ந்தெடுப்பான் என்பது
உங்களுக்கு நன்றாக தெரியும்.
6. தத்துவ பிரயோகங்களின் விளைவு - மேலே சொன்னதுபோல
வேட்கை என்பது தனி மனிதனோ சமுதாயமோ கொண்டபோது, அதற்குத் தேவையானது தத்துவத்தேடல்.
இந்த வேட்கையினால் நடக்கும் பிரயோகம் இயக்கத்தில் தடை ஏற்படுத்தும் பொழுது அது
புரட்சியாகவும் தோன்றுகிறது. தடை அல்லது நிகழ்ச்சி பிரவாகத்தில் தடை எப்பொழுதும்
ஏற்படுவதில்லை. சில நேரம் இயக்கத்தில் காரிய மாற்றத்தை தோற்றுவிக்கிறது, இந்த
காரியம் மாற்றம் என்பது முன்போல சிறுதும் ஒத்திராத வகையிலும் இருக்கலாம். உதாரணமாக
ஒரு மரத்தின் பழங்கள் ஒவ்வொரு வருடமும் பழுத்து, அதன் விதைகள் முதிர்ந்து, பின்
பழத்தின் காம்பு உலர்ந்து பழம் கீழே விழும். இது லோகாயதவிதியாக இருப்பின். அனைத்து
பழங்களும் இப்படி விழுவதில்லை. பறவைகளும் மிருகங்களோ அதன் விதைகள் உதிர்வதற்கு
முன்னாலேயே பறித்து உண்டு விடுகிறது. இது ஒரு நிகழ்ச்சி பிரவாகத்தின் தடை இது தனி
விருப்பத்தினாலோ தேவையான அளவு உருவாகிறது. அபாரமான வேட்கை என்பது ஒரு புயலில் அந்த
மரம் சாய்ந்து அந்த நிகழ்ச்சியில் பெரும் தடை ஏற்படுத்துதல் போன்றது. எல்லா தத்துவ
பிரயோகங்களும் புயலைப் போல இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சில தத்துவங்கள்
பழம் பறிப்பது போல் ஒரு சிறிய தாக்கத்தை செய்கின்றன. தத்துவங்கள் கிளை,இலை மேல்
தாக்கம் கொள்ளாமல் வேர் மேல் தாக்கம் கொள்வது என்பது வேட்கையை எவ்வளவு தூரம்
தத்துவத்தால் தணிக்க முடியும் என்பதை பொறுத்தது.
7. உண்மையும் நிதர்சனமும். நிதர்சனத்தில் உண்மை
என்ற ஒன்று இருக்கவே முடியாது. நிதர்சனம் உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படலாம். நான்
இங்கு குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. நிதர்சனத்தையே சொல்கிறேன். சூரியன்
உதிக்கும் திசை கிழக்கு என்பது உண்மையா நிதர்சனமா. இது நம் புலன்களில் தோன்றும்
அறிவாகும், ஆனால் சூரியன் உதித்தல் என்பதும் கிழக்கு திசை என்பதும் நம்மால்
ஏற்படுத்தப்பட்டது. இதை உண்மை என்று கூற முடியாது. ஆய்வின் மூலமாக நமக்கு
கிடைக்கும் விடையங்களை நிதர்சனம் என்றும், உண்மைக்கு அருகிலும் எடுத்துக்
கொள்ளலாம். நமது பாரத தேசத்தில் உண்மை, தர்மம், என்று பல நேரங்களில் பல சொற்களில்
நாம் கேள்விப்படுகிறோம். காடுகளை அழித்து நகர நிர்மாணம் புண்ணியம் என்று இருந்தது.
இன்று அது புண்ணியமா? "சர்வேஷா மேவதானானாம் பாரியாதானம்
விஷேசியதே" என்று மனைவிதானம் பெரும் தர்மமாக இருந்தது. இன்று அது சாத்தியமா? எல்லா
காலநிலை மற்றும் இடத்தில் பொருந்தும் தன்மையே நிதர்சனம் எனப்படும் இது விஞ்ஞான
வாயிலாக சாத்தியமான ஒன்று.
8. முடிவு. பௌத்தம் சொல்லும் எதுவும் நிரந்தரம்
இல்லை எல்லாம் மாற்றத்திற்குரியது. ஹெகலும் இந்த உலகம் ஒவ்வொரு வினாடியும்
மாற்றத்தை (வளர்ச்சியை) சந்திக்கிறது என்கிறார். மாற்றம் என்பது பொருள், எண்ணம்
இவைகளில் ஏற்படுவது என்றாலும் காலத்தின் மாற்றம் பொருளையும், பொருளின் மாற்றம்
இடத்தையும், இடம் மற்றும் பொருளின் மாற்றம் எண்ணத்தையும் தாக்குகிறது. காலமாற்றம்
நடைபெற காரணம் யாது? அதுவே லோகாயதசக்தியாகும் அதற்கு உருவம்,பெயர்,ஆன்மா தேவை இல்லை.
Comments
Post a Comment