Skip to main content

அமிர்தாஸ்வன்

 அமிர்தாஸ்வன் 

இடம்: மத்திய ஆசியா வட குரு பூமி 

இனம்: ஹிந்து ஈரானியர் 

காலம்: கி மு 3000 

இந்த காலம் தாய் வழி சமுதாயம் முடிந்து தந்தை வழி சமுதாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பது உணவின் தேவை வேட்டையால் மட்டுமே பூர்த்தி செய்த காலம் மாறி, கால்நடை வளர்ப்பால் உபரி உணவு கிடைத்தது. வேட்டையாடும் நேரத்திற்கு பதிலாக கால்நடை வளர்ப்பு, விலங்கின் ரோமங்கள் மற்றும் தோலால் ஆடை தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபரியின் காரணமாக தனிச்சொத்துடைமை உண்டானது என்றாலும், அதுவும் தாயிடமே இருக்கலாமே?. ஏன் அது ஆணின் சொத்தானது?. இதன் மூல காரணம் மிக விளக்கமாக "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் எங்கல்ஸ் விவரித்திருக்கிறார். இதற்கு முன் உள்ள காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு என்ற ஒன்று வந்ததிலிருந்து உற்பத்தி சாதனங்களின் மேல் உள்ள உரிமை பொதுவாக ஆண்களுக்கு என்றானது. கால்நடை மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆண்களைச் சார்ந்தும். மற்ற அனைத்து பிற பொருள்களின் உரிமை மற்றும் குடும்பத்தின் நிர்வாகம் ஆகியவை பெண்களை சார்ந்து இருந்தது. திருமணம் முறிந்த போது ஆண் தனது உரிமை உள்ள உற்பத்தி சாதனங்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கமானது.உற்பத்தி சாதனம் மற்றும் கால்நடைகளின் மாபெரும் மதிப்பை தாய் வழி சமுதாயம் தவறவிட்டதே மிகப்பெரிய மூல காரணமாகும்.

தாய் வழி சமுதாயத்தில் உள்ள தொழில்கள் அத்தியாவசிய உயிர் பிழைக்க தேவையான தொழில்கள் மட்டுமே. உணவிற்காக வேட்டை, மிருகத்தின் தோலாடை அதுவும் நேர்த்தியாக பதப்படுத்தியது என்று கூற முடியாது. தங்குவதற்கு குகைகள் அல்லது மிகப் பெரிய குடும்ப கூடாரங்கள் இருந்தன. இதைக் கடந்த தொழில்கள் ஏதுமில்லை அல்லது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சிறு தொழில்களாகும். அனைவரும் எல்லா தொழில்களிலும் ஈடுபட்டனர். 

ஆனால் தொடக்க கால தந்தை வழி சமுதாயத்தில் இவர்கள் காடும் காடு சார்ந்த இடத்திலும் சமவெளிகளிலும் வசித்தனர். இங்கு தொழில்களாக வேட்டையாடுதல், கால்நடை வளர்த்தல், உணவு சமைத்தல், ஆடை நெய்தல், குதிரை வளர்ப்பு, குதிரை ஏற்றம், ஆயுதம் தயாரித்தல், மதுபானம் தயாரித்தல், தேவர்களுக்காக அவி கொடுத்தல் என பல தொழில்கள் விரிவடைந்தன. இதில் மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் என்பது சில தொழில்களுக்கு தேவைப்படுகிறது. இதுவரை ஆண் பெண் சமமாக செய்த தொழில்களில் நேர்த்தி என்பது சில இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இருக்கலாம். உபரி இருந்ததால் வணிகமும் தொடங்கி இருக்கலாம். வணிகத்தில் பொருள்களின் தரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திருந்தால் அந்தப் பொருள்களின் விலையும் தரத்திற்கு தகுந்தாற்போல் உயரும் அல்லவா. நன்றாக நெய்யப்பட்ட கம்பளி ஆடை, தோல் ஆடைகள், காலணிகள், கலை வேலைப்பாடு செய்யப்பட்ட மரத்தால் அல்லது விதைகளால் ஆன ஆபரணங்கள், கூடைகள் போன்ற பொருள்களின் தரம் அதன் நேர்த்தியால் முடிவு செய்யப்படுகிறது. இங்கு காண வேண்டிய ஒரு செய்தி உபரியினாலும், கால்நடை வளர்ப்பதினாலும் மக்களின் வேட்டையாடும் நேரம் குறைக்கப்பட்டதால் அவர்கள் அந்த நேரத்தில் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த நிலைமை சரியானது என்று கொண்டால் தரமான பொருள்கள் பெண்களால் செய்யப்பட்டதாக இருக்கும் எனில் அவர்கள் நேர்த்தியான வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். பெண்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்ட போது அவர்களின் மகத்தான தாய் வழி சமுதாய உரிமையும், சம உரிமையும் சிறிது சிறிதாக பறிபோனதை அவர்கள் உணரவில்லை. 

குடும்ப நிர்வாகம் என்பது சமுதாயத்தில் மாபெரும் மதிப்பை கொண்டிருந்த நிலைமை சிறிது சிறிதாக மாறத் தொடங்கி. உணவு உற்பத்தி மற்றும் உற்பத்தி சாதனங்களை உள்ளடக்கிய சொத்து சமுதாயத்தில் அதிக மதிப்பு பெற்றது. இதனால் தாய் வழி சமுதாயம் தன் மதிப்பை இழந்து தந்தை வழி சமுதாயத்தின் தோற்றத்தை உருவாக்கியது. 

தந்தை வழி சமுதாயத்தின் ஆரம்ப கட்டத்தில் பெண்களின் நிலை அவ்வளவு மோசமானதாக இல்லை. பெண்கள் பொருள்களாக கருதப்படவில்லை. ஆயினும் தனி சொத்துரிமையின் காரணமாக திருமணம் அல்லது நிரந்தர கணவன் மனைவி உறவு ஏற்பட்டது. இது தாய் வழி சமுதாயத்தில் கிடையாது. உறவு என்பது சொத்துரிமையின் காரணமாக வருகிறது என்பதை நாம் இதிலிருந்து அறியலாம். தமிழ் இலக்கியங்கள் மருத நிலம் சார்ந்த பாடல்களில் 'புதல்வன் தாய்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண் பலதார மணமும் அல்லது அணுகியரை கொண்டிருந்தாலும் முறையான ஒரு உறவு முறையை சொத்துரிமைக்காக அந்த சமுதாயம் உருவாக்கியது. இந்த முறையை நில பிரபத்துவத்தில் 'பட்டத்து ராணியாக' இருந்தது. 

தந்தை வழி சமுதாயத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில பொதுவான கூறுகளை தாய் வழி சமுதாயத்தில் இருந்து எடுத்துக் கொண்டது. அதில் ஒன்று ஒரு பெண் சில தருணங்களில் கணவனைத் தவிர வேறு ஆடவனை கணவனாக தற்காலிகமாக வரிக்கலாம். எந்தத் தருணம் என்றால் அது சமூகத்தில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மதச்சடங்குகள் மற்றும் விருந்தினர்கள் இல்லங்களில் வரும் பொழுது. இந்த நேரங்களில் பெண் வேறு ஆடவனை கணவனாக கொள்ளலாம். இந்த காலங்களில் சொத்துரிமை என்பது கால்நடை மற்றும் பொருள்களின் மீது இருந்ததே தவிர பெண்கள் தனி சொத்தாக கருதப்படவில்லை.

உணவு: குதிரை முக்கிய உணவாகவும் சோம பானமும் இருந்தது. "மணம் கமலும் குதிரையின் மாமிசம்" என்று தீர்க்கதாமஸ் என்ற ரிக்ஷி கூறியுள்ளார். சோமம் அல்லது சோமக்கிழங்கு என்பது ஒருவகை போதை தரும் பானமாக வட குரு தேசத்தின் இருந்திருக்கலாம்.  

கொள்ளையர்களும் திருடர்களும் இருந்ததிலிருந்து தனியுடைமை முழுவதுமாக அமலுக்கு வந்ததும் அதன் முரண்பாட்டு மோதல்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஒரு பெண் ஆணுக்கு உடையவள் என்ற திருமணம் முறையும் இருந்தது. குலங்களுக்கு இடையே கொள்வினை கொடுப்பினை இருந்தது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. 

பெண்கள் குடும்ப வேலைகளையும், குழந்தை வளர்ப்பையும், விருந்து உபசரிப்பையும் செய்யும் பொறுப்பு சமுதாயம் அமைக்கப்பட்டது போன்று தோன்றுகிறது. மக்களின் ஏற்றத்தாழ்வுகளோ படிநிலைகளோ இல்லாத காலமாகும் ஏனெனில் இவர்கள் ஒரு குலமாக இருந்ததினாலும் இன்னும் அடிமைச் சமுதாயம் ஏற்படாதாலும் இங்கு ஒரு படிநிலைகளோ வர்ணமோ தோன்றவில்லை. தொழில்களுக்கு ஏற்ப ஆண் பெண் என்ற வர்க்க வேறுபாடு தோன்றியது எனலாம். தனி சொத்துரிமையும், சமுதாய அந்தஸ்தும் முரண்பாட்டை அந்த சமூகத்தில் தோற்றுவிக்க காரணமாக அமைந்தது. இருந்தாலும் மக்களிடம் பற்றாக்குறை என்ற நிலை வராதவாறு சமுதாயத் தலைவர்கள் பார்த்துக் கொள்ளும் வரை இங்கு உட்கலகங்கள் மூள வாய்ப்புகள் இல்லை.

குலத்தில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்பட்டு சமூக சபை இருப்பதாக இந்த ஆட்சி முறையில் தெரிகிறது. தேவையான பொருள்களின் தட்டுப்பாட்டால் கொள்ளைகள் அரங்கேறி இருக்கலாம். இதுவே குலத்திற்க்கு இடையே பகைமைக்கு காரணமாக இருக்கலாம். அளவிலும் பலத்திலும் வலுவான குலங்கள் அந்த இடத்தை தன்னிடம் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கலாம்.

குலங்களுக்கு இடையான போரில் தோல்வியுற்ற குலத்தின் ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் பெண்கள் வெற்றியடைந்த குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதற்கு முந்தைய சமுதாயமான தாய் வழி சமுதாயத்தில் இருந்து இது மாறுபட்டதாக இருக்கிறது. இதற்கு மூலகாரணம் தொழில்களின் முன்னேற்றமும் மக்கள் சக்தியின் தேவையே ஆகும். அதிக மக்கள் சக்தியினால் அதிக பொருள் உற்பத்தியை காண முடியும். தனி சொத்துரிமை உற்பத்திக்கு ஊக்கம் தருவதாக இருந்தது. அப்படியானால் ஆண்கள் மட்டும் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்களையும் உற்பத்தியின் தேவைக்காக உபயோகப்படுத்தலாமே?. இதற்கு பதில் காண நாம் இந்த சமுதாயத்தின் அடிப்படை உருவாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தந்தை வழி சமுதாயமாக உள்ளது அதாவது தந்தையின் சொத்து உரிமை மகனுக்கு. இந்த குடும்பம் பிதுரர்களின் வழியில் வரக்கூடிய தலைமுறைகளை கொண்டிருக்கிறது. பிதுரர்கள் அல்லது முன்னோர்கள் ரத்த கலப்பு இல்லாத அந்த குலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குலம் என்ற வார்த்தையை விட கோத்திரம் என்ற வார்த்தையே சரியானது. வேறு குழுவின் ஆண்கள் இதன் காரணத்தினாலேயே மற்றொரு குழுவில் இணைய முடியாது காரணம் சொத்துரிமை ஆணுக்கு உள்ளதாலும் பிதுரர்கள் தன் கோத்திரத்தை சேராதவர்கள் என்பதாலும், ஆண்கள் வேறு குழுக்களில் சேர்க்கப்படுவது இல்லை. ஆகையால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு சொத்துரிமை இல்லாததாலும் மற்ற குலத்திலிருந்து கொள்வினை கொடுப்பினையால் வந்ததாலும் அவர்கள் எந்த குலத்திலும் இணையலாம். அப்படி கொள்ளப்பட்ட பெண்களை ஆண்கள் மணம் செய்து கொண்டனர் இங்கு தான் பலதாரமணம் தொடங்கி இருக்கலாம். 

இராகோஸ் போன்ற செவ்விந்தியர்களில் ஆண்களும் ஒரு குலத்திலிருந்து மற்றொரு குலத்திற்கு சுவீகாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். இது குலத்தையும் அவர்களின் மத சடங்குகளையும் பொறுத்து இருக்கிறது. குலங்கள் தாயுரிமையை கொண்டிருக்கும் வரை இவை சாத்தியமாகும். இதற்கு முன் பார்த்த நிஷா என்ற கதையில் குலங்களுக்கு இடையிலான போரில் தோற்ற குலத்தில் அனைவரும் கொல்லப்பட்டது நினைவு இருக்கலாம். இதன் காரணம் இவர்கள் காட்டுமிராண்டி நிலைமையில் கடை கட்டத்தில் இருந்தவர்கள் ஆவர். மேலும் அவர்களை மன்னிக்கவும் தங்கள் குலத்தில் சேர்க்கவோ எந்தவிதமான காரணமும் அவர்களிடம் இல்லை. இதை முடிவு செய்வது பொருள் உற்பத்தியும் அதன் தேவையும் உற்பத்தியில் உறவுகளும் சமுதாயத்தின் கட்டமைப்பை தீர்மானிக்கிறது. தாய்வழிச்சமுதாயத்தின் இறுதி காலங்களில் உற்பத்தி சாதனங்களில் உரிமையை பெண்கள் தன்னிடம் வைத்திருந்தாலும் நேர்த்தியான சில பணிகளை பெண்களுக்கு பதிலாக ஆண்கள் செய்திருந்தாலும் வரலாறு தலைகீழாக மாறிப் போய் இருக்கலாம். நாம் ஆணித்தரமாக ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது வர்க்கத் தோற்றங்களே வரலாறு பொருள் உற்பத்தியும் அதன் உறவுகளுமே ஒரு சமுதாயத்தின் படிநிலை வளர்ச்சிக்கு வர்க்க தோற்றத்திற்கும் மூல காரணமாக உள்ளது

Comments

Popular posts from this blog

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

தேடலின் தொடக்கம்

  Date: 06 Mar 2025 நான் இந்த தத்துவ தேடலுக்குள் எப்படி வந்தேன் என்று யோசிக்கும் பொழுது விந்தையாகவே இருக்கிறது. பொறியியல் பட்டமும் அதை சார்ந்த வேலையும் பெரும்பாலான வருடங்களை எடுத்துக் கொண்டது. எனது ஆன்மீக தேடலும் நடுநடுவே இருந்து கொண்டு தான் இருந்தது 2020 வரையிலும் அனேக புராண, கதைகள்,காவியங்கள் மேலோட்டமாகவோ ஆழ்ந்தோ கேட்டு படித்த அனுபவம் சிறிது உள்ளது. இவைகளை ஆய்வு செய்யும் எண்ணம் எனக்கு ஏற்படவே இல்லை எனலாம். பின்னர் என் வாழ்நாளில் பெரும்பான்மையான நேரத்தை தத்துவ தேடலில் நான் கழிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இதை தற்செயல் என்பதா? நியதி (ஊழ்) என்பதா? கர்ம வினை என்பதா? பிரம்மத்தின் விருப்பம் என்பதா?அல்லது இயற்கையின் அவா என்பதா?  மேலே எழுந்த கேள்விகள் அனைத்தும் ஒவ்வொரு மெய்யிலின் கருகேள்விகள் ஆகும். என் தேடலுக்கும் வாழ்க்கை பாதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம் என்று ஒன்றை கற்பிக்க முயற்சி செய்ய விருப்பமில்லை. அப்படி ஒரு காரணம் கற்பித்தால் நான் ஏதோ ஒரு தத்துவ இயலில் சிக்கக்கூடும். எது எப்படி ஆனாலும் என் தேடல் தொடரும் என்னுள் இந்த தாக்கம் நீண்ட நாள் இருப்பதாகவே கருதுகிறேன்.

வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

  வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும் , தத்துவங்களும் , வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்ட...